வருமான வரித்துறையினருக்கு மோடி வரும் விமானத்தில் சோதனை செய்ய தைரியம் இருக்கிறதா? மு.க.ஸ்டாலின் கேள்வி


வருமான வரித்துறையினருக்கு மோடி வரும் விமானத்தில் சோதனை செய்ய தைரியம் இருக்கிறதா? மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 2 April 2021 8:52 PM GMT (Updated: 2 April 2021 8:52 PM GMT)

மோடி வரும் விமானத்தில் சோதனை செய்வதற்கு வருமானவரித்துறையினருக்கு தைரியம் இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

கடலூர், 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வடலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

பனங்காட்டு நரிகள்

என்னுடைய மகள் வீட்டில் இன்றைக்கு சோதனை நடத்தினார்கள். நாளைக்கு என் வீட்டில் நடக்கும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாங்கள் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சி விட மாட்டோம்.

தேர்தலுக்காக ஏதோ பணம் பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்கு செய்தி கிடைத்தது. அதனால் வந்தோம் என்று இறுதியாக சொல்லப் போகிறார்கள். இதுவரைக்கும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நன்றாகத் தேடுங்கள். அதைத்தான் செய்தியாகச் சொல்லப் போகிறார்கள்.

பணமூட்டையுடன் வந்தார்

இப்போது எங்களுக்கு செய்தி கிடைத்திருக்கிறது. என்ன செய்தி என்றால், மோடி வருகின்ற விமானத்தில் பண மூட்டையுடன் வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தாராபுரத்திற்கு வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இப்போது மதுரைக்கு வந்திருக்கிறார். இரவோடு இரவாக வந்திருக்கிறார். அதனால் பண மூட்டையுடன் வந்திருக்கிறார். அமித்ஷா வரப்போகிறார். அவரும் பண மூட்டையுடன் வரப்போகிறார் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

வருமான வரித்துறையினருக்கு, நேரடியாக அவர்கள் வரும் விமானத்திற்குச் சென்று சோதனை செய்வதற்கு தைரியம் இருக்கிறதா?. பிரதமருக்கு ஒரு சட்டம். ஸ்டாலினுக்கு ஒரு சட்டமா? என்று நான் கேட்கிறேன். அவர் இந்த நாட்டின் பிரதிநிதிதான், நானும் இந்த நாட்டின் பிரதிநிதிதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story