இரவு 10 மணியை கடந்ததால் துறைமுகம் தொகுதியில் பேசாமல் வணங்கியபடி அமித்ஷா சென்றார்


இரவு 10 மணியை கடந்ததால் துறைமுகம் தொகுதியில் பேசாமல் வணங்கியபடி அமித்ஷா சென்றார்
x
தினத்தந்தி 3 April 2021 2:52 AM IST (Updated: 3 April 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

இரவு 10 மணியை கடந்ததால், துறைமுகம் தொகுதியில் அமித்ஷா பேசாமல் வணங்கியபடி சென்றார்.

சென்னை,

பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணமாக, நேற்று இரவு தனி விமானம் மூலம் இரவு 9.30 மணியளவில் சென்னை வந்தார். அவர் சென்னை துறைமுகம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து சவுகார்பேட்டையில் அமைந்துள்ள பா.ஜ.க. தேர்தல் பணிமனை அலுவலகத்தில் பேசுவதாக இருந்தது.

இந்த நிகழ்ச்சி இரவு 8.30 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அமித்ஷா வருகையில் காலதாமதம் ஏற்பட்டதால் அவரால் இரவு 10 மணியை கடந்து தான் பிரசார இடத்திற்கு வந்து சேர முடிந்தது.

வணங்கியபடி சென்ற அமித்ஷா

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, இரவு 10 மணிக்கு மேல் யாரும் பேசி வாக்கு சேகரிக்கக்கூடாது. அந்த நடைமுறையை கடைபிடிக்கும் வகையில் அமித்ஷா பேசவில்லை. காரில் இருந்து வணங்கியபடியே சென்றார். இரவு 10.02 மணிக்கு வந்த அவர் 4 நிமிடங்களில் புறப்பட்டு சென்றார்.

அமித்ஷா வருகையையொட்டி, சவுக்கார்பேட்டை பகுதி விழாக்கோலம் பூண்டு இருந்தது. அவரை வரவேற்பதற்காக காத்து இருந்த பா.ஜ.க.வினரும், வட மாநிலத்தவர்களும் அமித்ஷா பேசாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அமித்ஷா வருகை காரணமாக சவுகார்பேட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அமித்ஷா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு தங்கினார். அவர் இன்று காலை 10 மணியளவில் ஆயிரம்விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.

Next Story