கடந்த 10 ஆண்டுகளை போல் தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் வனவாசம் மீண்டும் தொடரும் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


கடந்த 10 ஆண்டுகளை போல் தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் வனவாசம் மீண்டும் தொடரும் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 3 April 2021 3:19 AM IST (Updated: 3 April 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 10 ஆண்டுகளை போல் தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் வனவாசம் மீண்டும் தொடரும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

மதுரை, 

மதுரையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

வருகின்ற சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. அது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். மக்கள் சக்திக்கும், தீய சக்திக்கும் இடையேயா ன தேர்தல். தமிழகத்திற்கு ஏற்றம் தந்த அ.தி.மு.க.விற்கும், பாரதீய ஜனதாவிற்கும், தமிழகத்திற்கு என்றைக்கும் ஏமாற்றம் தந்த தி.மு.க.விற்கும் இடையே நடக்கும் தேர்தல். கடந்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிய ஜெயலலிதாவின் ஆட்சி தான் வேண்டும் என்றும், வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட தி.மு.க. வேண்டாம் என்றும் தெளிவுப்படுத்தின்ற தேர்தல் இது.

ஒளிமயமான ஜெயலலிதாவின் ஆட்சி தான் வேண்டும். இருள் மயமான தி.மு.க. வேண்டாம் என்று மக்கள் உறுதி செய்யும் தேர்தல். அமைதி பூங்காவாக தமிழகத்தை உருவாக்கியுள்ள ஆட்சி தான் வேண்டும்.

அராஜக தி.மு.க. வேண்டாம் என்று எடுத்துக்காட்டும் தேர்தல். நிலங்களை பாதுகாத்து குடிமராமத்து செய்யும் நல்லாட்சி தான் வேண்டும். நிலஅபகரிப்பு செய்யும் பொல்லாத தி.மு.க. வேண்டவே வேண்டாம் என்று தமிழக மக்கள் இறுதி செய்கின்ற தேர்தல் தான் வருகிற தேர்தல்.

வனவாசம் தொடரும்

தமிழினத்திற்கும், தமிழகத்திற்கும் செய்த துரோகத்தின் பலனாகத்தான் கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க.வும், காங்கிரசும் வனவாசத்தை அனுபவித்து வருகின்றன.

அது இனியும் தொடரும். தமிழக மக்கள் தி.மு.க.வை கை கழுவி விட்டார்கள். காங்கிரசை எப்போதோ கை கழுவி விட்டார்கள். பிரதமர் மோடி பல்வேறு முனைப்பான முன்னோடி திட்டங்களால் இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக மாற்றி உள்ளார். தமிழகத்திற்கு அவர் ஏராளமான நன்மைகளையும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் திட்டங்களையும் அளித்து வருகிறார்.

தமிழகத்துக்கு ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை அளித்தவர் பிரதமர் மோடி. 1,500 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை நகரில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவ கல்லூரி கொண்டு வர உறுதுணை புரிந்தவரும் அவர் தான்.

எனவே தமிழக மக்கள் தி.மு.க.விற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசின் தொலை நோக்கு திட்டத்தால் தான் தமிழகம் இந்தியாவிலேயே பிற மாநிலங்களை விட முதலிடம் பெற்று விளங்குகிறது.

நமது வருங்கால தலைமுறையினர் நன்றாக, வளமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஜெயலலிதாவின் அரசு மீண்டும் தமிழகத்தில் அமைந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு இடையில் பிரதமர் மோடிக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்திலும் பேசினார்.

Next Story