ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை 3 மணி நேரம் நடந்தது


ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை 3 மணி நேரம் நடந்தது
x
தினத்தந்தி 4 April 2021 1:13 AM GMT (Updated: 4 April 2021 1:13 AM GMT)

போடியில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் சோதனை நடத்தினர்.

போடி, 

தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பேரவை பொருளாளராக இருப்பவர் குறிஞ்சி மணி. இவர் போடி சுப்புராஜ் நகரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டின் அருகே வசித்து வருகிறார். மேலும் தனியாக ரத்த பரிசோதனை நிலையம் வைத்து உள்ளார். இவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று காலை 6.30 மணியளவில் மதுரை கோட்ட வருமான வரித்துறை உதவி ஆணையர் பூவலிங்கம் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் குறிஞ்சிமணியின் வீட்டில் சோதனை நடத்த வந்தனர். அப்போது வீட்டில் குறிஞ்சி மணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் இருந்தனர்.

3 மணி நேரம்

இதையடுத்து வருமானவரித்துறையினர் சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர். சோதனையின்போது பாதுகாப்பிற்காக போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சோதனையில் ரூ.25 ஆயிரத்து 400 மட்டும் சிக்கியது. இதை குடும்ப செலவுக்கு வைத்திருப்பதாக குறிஞ்சிமணி குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பணத்தை வருமானவரித்துறையினர் அவர்களிடம் திரும்ப கொடுத்தனர். வேறு ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனிடைேய குறிஞ்சி மணி வீட்டில் சோதனை நடக்கும் தகவல் அறிந்து அவரது வீட்டின் முன் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story