மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி? - தேர்தல் ஆணையம் தகவல்


மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி? - தேர்தல் ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 4 April 2021 6:08 AM GMT (Updated: 4 April 2021 6:08 AM GMT)

மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி? என்பது பற்றி இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணையம் ஏற்கனவே தந்துள்ள வாக்காளர் தகவல் சீட்டையும், இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 அடையாள ஆவணங்களில் எதையாவது ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு, முக கவசம் அணிந்து, வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சமூக இடைவெளிக்கான வட்டம் வரையப்பட்டு இருக்கும். அந்த வட்டத்திற்குள் வந்து வரிசையில் நிற்க வேண்டும்.

உங்களுக்கான வாய்ப்பு வரும்போது உள்ளே செல்ல வேண்டும். அங்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் இருப்பார்கள். எதிரே, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கான தேர்தல் முகவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் அந்த தொகுதி மற்றும் வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியல் இருக்கும்.

முதல் அலுவலரிடம் உங்கள் பெயர், வார்டு எண் போன்ற வாக்காளர் தகவல் சீட்டில் தரப்பட்டிருந்த தகவல்களைக் கூற வேண்டும். அவர் அதை தன்னிடம் இருக்கும் பட்டியலுடன் சரிபார்ப்பார். உங்கள் பெயர் இருக்கும்பட்சத்தில் அதை சத்தமாக படிப்பார். அதை வேட்பாளர்களின் முகவர்கள் சரிபார்ப்பார்கள்.

அதைத் தொடர்ந்து உங்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 ஆவணங்களில் ஒன்றை அளிக்க வேண்டும். உங்கள் பெயரை டிக் செய்துவிட்டு 2-ம் அலுவலரிடம் உங்களை முதல் அலுவலர் அனுப்பி வைப்பார்.

அங்குள்ள மேஜையில் உங்களின் இடது கையை வைக்க வேண்டும். அந்த அலுவலர் உங்களின் இடது கை ஆள்காட்டி விரலின் நகத்தையும், தோலையும் இணைத்து மை வைப்பார். அதை துடைக்கக் கூடாது. சில நொடிக்குள் நன்றாக காய்ந்துவிடும். பின்னர் உங்களிடம் ஒரு சீட்டை கொடுத்துவிட்டு, அங்கிருக்கும் ஆவணம் ஒன்றில் உங்களின் கையெழுத்தைப் பெறுவார்.

பின்னர் 3-ம் அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் அந்த சீட்டை பெற்றுக்கொண்டு உங்களின் விரலில் மை இருப்பதை உறுதி செய்வார். கொரோனா பரவல் காலம் என்பதால் வலது கைக்கான கையுறையை அவர் வழங்குவார். அதை கையில் போட்டுக்கொண்டு 4-ம் அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் நீங்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குப்பதிவு எந்திரத்தை தயார் செய்து வைப்பார்.

உடனே நீங்கள் அட்டைப்பெட்டிகளால் மறைக்கப்பட்டுள்ள இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தயார் நிலையில் எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரமும், அதன் அருகே விவிபேட் என்ற நீங்கள் அளித்த வாக்கை உறுதி செய்யும் எந்திரமும் வைக்கப்பட்டு இருக்கும். உங்களுக்கு பிடித்தமான வேட்பாளரின் பெயருக்கு நேராக உள்ள நீல நிறை பட்டனை அழுத்த வேண்டும். அப்போது அதன் அருகே இருக்கும் சிவப்பு விளக்கு எரிவதோடு, நீண்ட பீப் சத்தமும் கேட்கும்.

அப்போது விவிபேட் எந்திரத்தின் கண்ணாடியாலான சிறிய திரையின் பின்புறம் ஒரு துண்டு தாள் அச்சாகி வரும். அதில் நீங்கள் ஓட்டளித்த சின்னம், எண், பெயர் காணப்படும். இது 7 விநாடிகள் நீடிக்கும். பின்னர் அது எந்திரத்திற்குள் விழுந்துவிடும். உங்கள் வாக்கு சரியான வேட்பாளருக்கு சென்று சேர்ந்ததை இதன் மூலம் உறுதி செய்யலாம்.

Next Story