கேரளாவில் இன்று சட்டசபை தேர்தல்: மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு


கேரளாவில் இன்று சட்டசபை தேர்தல்: மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 5 April 2021 11:41 PM GMT (Updated: 5 April 2021 11:41 PM GMT)

கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதேநேரம் மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

திருவனந்தபுரம், 

கேரள சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 1-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே மாநிலத்தில் மொத்தமுள்ள 140 இடங்களுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி (இன்று) தேர்தல் நடத்தப்படும் என கடந்த பிப்ரவரி 26-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அத்துடன் மாநில தேர்தல் களமும் சூடுபிடித்தது. ஆட்சியை கைப்பற்ற கட்சிகளுக்குள்ளே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி என 3 பிரதான அணிகள் களத்தில் உள்ளன.

அனல் பறக்கும் பிரசார கூட்டங்கள், தொடர் பேரணிகள், சாலை பேரணி எனப்படும் பிரமாண்ட ரோடு ஷோக்கள் என கேரள தேர்தல் களம் கடந்த சில வாரங்களாக களை கட்டியிருந்தது. தங்கள் அணிகளுக்கு வலுவூட்டுவதற்காக கட்சிகளின் தேசிய தலைவர்களும் மாநிலத்தில் முகாமிட்டு இருந்தனர்.

மக்களின் வாக்குகளை கவர்வதற்காக பல்வேறு வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை 3 அணிகளும் வெளியிட்டிருந்தன. குடும்ப தலைவிகளுக்கு ஓய்வூதியம், சமூக நல பென்ஷன் திட்டங்கள், இலவச கியாஸ் சிலிண்டர்கள், லேப்டாப் என கவர்ச்சி வாக்குறுதிகள் வரிசை கட்டியிருந்தன.

இந்துக்கள், சபரிமலை பக்தர்களை கவர்வதற்காக லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம், சபரிமலை பாரம்பரியத்தை பாதுகாக்க சட்டம் என பா.ஜனதாவும் வாக்குறுதிகளை அளித்து பிரசாரங்களை மேற்கொண்டது.

பெண் வாக்காளர்கள் அதிகம்

மாநிலத்தில் அனல்பறந்த தேர்தல் பிரசாரம் அனைத்தும் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்வடைந்தன. அதைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இதில் 3 அணிகளிலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என 957 பேர் களத்தில் உள்ளனர். இவர்களது அரசியல் எதிர்காலத்தை 2.74 கோடி வாக்காளர்கள் இன்று தீர்மானிக்கிறார்கள்.

இதில் 1 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 724 ஆண் வாக்காளர்களும், 1 கோடியே 41 லட்சத்து 62 ஆயிரத்து 25 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இவர்களை தவிர 290 மூன்றாம் பாலின வாக்காளர்களும் மாநிலம் முழுவதும் உள்ளதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

இவர்கள் எவ்வித இடையூறும் இன்றி வாக்களிப்பதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் ஏராளமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கொரோனா பரவல் காரணமாக இந்த முறை வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாக்களிப்பதற்காக மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக மாநில போலீசாருடன் இணைந்து பல்லாயிரக்கணக்கில் துணை ராணுவமும் மாநிலம் முழுவதும் பணியமர்த்தப்பட்டு உள்ளது.

இடதுசாரி முன்னணியை பொறுத்தவரை முதல்-மந்திரி பினராயி விஜயன், மந்திரிகள் சைலஜா, கடகம்பள்ளி சுரேந்திரன், கே.கே.ஜலீல் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். காங்கிரஸ் அணியிலும் முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, முரளீதரன், பி.டி.தோமஸ் உள்பட ஏராளமான பிரபலங்கள் உள்ளனர்.

பா.ஜனதா அணியில் மிசோரம் முன்னாள் கவர்னர் கும்மணம் ராஜசேகரன், மெட்ரோமேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன், மாநில தலைவர் சுரேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர்கள் சுரேஷ் கோபி, அல்போன்ஸ் உள்ளிட்டோருக்கு இந்த தேர்தல் முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது.

கேரளாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடதுசாரி அணியும், காங்கிரஸ் அணியும் மாறி மாறி ஆட்சியை பிடிப்பது கடந்த 20 ஆண்டுகாலமாக நடந்து வருகிறது. ஆனால் இந்த வரலாறு இந்த முறை மாற்றி எழுதப்படும் எனவும், இடதுசாரி முன்னணி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைக்கும் எனவும் இடதுசாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.

ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ இந்த முறை ஆட்சி தங்களுக்குத்தான் என சவால் விட்டு களம் காண்கிறார்கள். இந்த 2 அணிகளுக்கும் சற்றும் சளைக்காமல் பா.ஜனதாவும் தளராமல் களத்தில் இருக்கிறது.

இந்த அணிகளின் எதிர்காலம் மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடும். இதற்கிடையே நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றுள்ள மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெற்கு 24 பர்கானாக்கள், ஹவுரா, ஹூக்ளி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உட்பட்ட 31 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 205 வேட்பாளர்களின் தலைவிதியை 78.5 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிக்கிறார்கள். இதற்காக 10,871 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதைப்போல அசாமிலும் 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. அங்கு இன்று தேர்தல் நடைபெறும் 40 தொகுதிகளில் 337 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். அசாமில் இன்றுடன் சட்டசபை தேர்தல் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநிலங்களிலும் மாநில போலீசாருடன் இணைந்து ஆயிரக்கணக்கான துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story