வாக்குப்பதிவு செய்ததற்கான சிலிப் வராததால் வாக்குச்சாவடியிலேயே அமர்ந்திருந்த அமைச்சர் செல்லூர் ராஜூ


வாக்குப்பதிவு செய்ததற்கான சிலிப் வராததால் வாக்குச்சாவடியிலேயே  அமர்ந்திருந்த  அமைச்சர் செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 6 April 2021 6:42 AM GMT (Updated: 6 April 2021 6:42 AM GMT)

வாக்குப்பதிவு செய்ததற்கான சிலிப் வராததால் வாக்குச்சாவடி அலுவலரிடம் முறையிட்டு, வாக்குச்சாவடியிலேயே அமர்ந்து இருந்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

சென்னை

மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே ராஜூ, மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட மீனாட்சி அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது விவிபேட் மிஷினில் அவர் பதிவு செய்த வாக்கிற்கான சிலிப் வராததால் வாக்குச்சாவடி அலுவலரிடம் இதுகுறித்து முறையிட்டு, வாக்குச்சாவடியிலேயே செல்லூர் கே.ராஜூ அமர்ந்தார்.

மண்டல அதிகாரி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதித்து தங்களது வாக்கு விழுந்திருப்பதாக கூறிய பிறகே, செல்லூர் கே ராஜூ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் இந்த வாக்குச்சாவடியில் 15 நிமிடம் வாக்குப்பதிவு தாமதமானது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலத்தூர் வாக்குச்சாவடி எண் 196-ல் வாக்குப்பதிவு நிறுத்தம்

மயிலாடுதுறையில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை திருவிழந்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 131-வது வாக்குச்சாவடி மையத்தின் முன்பு திமுக நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருசக்கர வாகனத்தை தொலைவில் சென்று நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனத்தை அகற்றாவிட்டால் காற்றைப் பிடுங்கி விடுவேன் என போலீசார் எச்சரித்தனர். 'உன்னால் முடிந்தால் செய்துபார்' என திமுக நகர செயலாளர் சவால் விடுத்தார்.

இதையடுத்து அப்பகுதியில் பிரச்சினை ஏற்பட இருந்த நிலையில் அங்கு நின்றிருந்த அதிமுக பிரமுகர்கள் திமுக நகர செயலாளருக்கு சாதகமாக பேசி நிலைமையை சரி செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கடைவீதி சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 178-ல் வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 7-ல் அமமுக வேட்பாளர் மாதேஸ்வரன் புகைப்படம் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வாக்குச்சாவடி மையத்தில் இருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக முகவர்கள் இதுகுறித்து வாக்குச்சாவடியின் மண்டல துணை அலுவலர் பிரவீன்ராஜுடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் அமமுக வேட்பாளர் மாதேஸ்வரன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

மேலும் இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஏன் தெரிவிக்கவில்லை ? என்று கேள்வி எழுப்பி வாக்கு மையத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இரண்டு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story