செஞ்சி அருகே வாக்குச்சாவடியில் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் - சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்
நல்லான் பிள்ளைபெற்றால் கிராம வாக்குச்சாவடியில் போலீசார் மற்றும் பொதுமக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நல்லான் பிள்ளைபெற்றால் கிராம வாக்குச்சாவடியில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. பொதுமக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில், வயதானவர்களை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர் வாக்குச்சாவடிக்கு இருசக்கர வாகனங்களில் அழைத்து வந்துள்ளனர். ஆனால் தேர்தல் விதிமுறைகளின் படி, வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தான் இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும் என்பதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநில போலீசார், உள்ளூர் மக்கள் சிலரை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் வாசிகள் அங்கு கூடி, வெளிமாநில போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதன் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதையடுத்து அந்த பகுதியில் மேலும் போலீசார் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக நல்லான் பிள்ளைபெற்றால் கிராம வாக்குச்சாவடியில் சிறிது நேரத்திற்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது.
Related Tags :
Next Story