தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவு


தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி 63.60%  வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 12:28 PM GMT (Updated: 6 April 2021 12:41 PM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை

இன்று தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. மேற்குவங்காளத்தில் 3-வது கட்ட தேர்தலும், அசாமில் 3-வது இறுதிகட்ட தேர்தலும் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சம் பேர். இதுதவிர 3-ம் பாலினத்தவர் 7192 பேர் உள்ளனர்.

இன்று காலை 5 மணிக்கெல்லாம் வாக்குச்சாவடி அதிகாரிகள், ஊழியர்கள் வாக்கு மையத்துக்கு வந்து தங்களது இருக்கையில் அமர்ந்தனர். 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி பார்க்கப்பட்டது.

சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கெல்லாம் வாக்களிக்கும் ஆர்வத்தில் வாக்காலர்கள் குவியத்தொடங்கினர்.

கொரோனா பிரச்சினை காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி முககவசம் அணிந்து இருக்கிறார்களா என உறுதி செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். அவ்வாறு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குப்பதிவு மையத்திலேயே முககவசம் வழங்கப்பட்டது.

கியூவில் நிற்கும் வாக்காளர்கள் சமூக இடைவெளி விட்டு நிற்பதற்காக வட்ட வடிவில் அடையாளக்குறிகள் போடப்பட்டு இருந்தன.

வாக்குச்சாவடியின் முன்பகுதியில் 2 பிரிவாக ஊழியர்கள் அமர்ந்து இருந்தனர். ஒரு பிரிவினர் ஓட்டு போட வந்த நபர் முககவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து அவரது கையில் சானிடைசரை தெளித்தனர். மற்றொரு பிரிவினர் அவருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப சோதனை நடத்தி, ஒரு பாலிதின் கையுறை வழங்கினார்கள்.

அதை அணிந்ததும் வாக்காளர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். அவருடைய அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு ஓட்டு போட அனுமதித்தனர். ஓட்டு போட்டு முடிந்ததும் கையுறையை கழற்றி போட தனியாக பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.

மாநிலம் முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே  ஆர்வமாக வந்து ஓட்டு போட்டார்கள்.இதனால் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக காலையிலேயே பலரும் வந்துவிட்டனர். அதேநேரத்தில் இளைஞர்கள் ஓட்டு போட வேண்டும் என்று அதிக ஆர்வத்துடன் வந்ததை காண முடிந்தது.

வாக்காளர்களுக்கு தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. வெயில் தாக்காமல் இருப்பதற்காக பல இடங்களில் பந்தலும் போடப்பட்டு இருந்தது.

ஓட்டுப்பதிவு தொடங்கியதும் சில வாக்குச்சாவடிகளில் ஓட்டு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அங்கு சிறிது நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மாற்று எந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது.

11 மணி நிலவரப்படி அதிக பட்சமாக நாமக்கல்லில் 28.33 சதவீதமும், குறைந்தப்பட்சமாக நெல்லையில் 20.98 சதவீதமும் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் மதியம்  1 மணி நிலவரப்படி  34.21  சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குப்பதிவாகி உள்ளது.

மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79% வாக்குகள் பதிவாகி உள்ளது.குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 32.29% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

மதியம் 3 மணி நிலவரப்படி 53.55% வாக்குகள் பதிவாகி உள்ளது.

5 மணி நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அளித்த பேட்டிவிவரம் வருமாறு:-

மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது இரவு 7 மணிவரை அனைவரும் வாக்களிக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் அதிக பட்சமாக 70. 79 சதவீதமும்,  நெல்லை மாவட்டத்தில் 50.05 சதவீதமும் பதிவாகி உள்ளது என கூறினார்.

Next Story