வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் -92 ல் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்
வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் வரும் 17 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மறுவாக்குப்பதிவு ஏன்?
தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் வாக்குப்பதிவு முடிந்ததும் இரவு 7:30 மணிக்கு,ஓட்டுச்சாவடியில் இருந்து, மூன்று ஊழியர்கள் சேர்ந்து, இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒரு வி.வி.பி.ஏ.டி., இயந்திரம் ஆகியவற்றை, இரு இருசக்கர வாகனத்தில்வைத்து எடுத்துச் சென்றனர்.
ஓட்டுச்சாவடியில் இருந்து, 200 அடி துாரத்தில் செல்லும் போது, அவர்களை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கட்சியினர், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கடத்தியதாக, மறியல் செய்தனர்.வேளச்சேரி போலீசார், இயந்திரங்களை மீட்டு, அதை கொண்டு சென்ற நபர்களை மடக்கி பிடித்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளிக்கையில், “இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவுக்காக 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பிறகு, விவிபேட்டில் கோளாறு ஏற்பட்டதால், வேறு விவிபேட் மாற்றப்பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடியில் 200 ஓட்டுகள் இருக்கும் நிலையில், இந்த இயந்திரத்தில் 15 ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இரு சக்கர வாகனத்தில் விவிபேட் எடுத்து சென்றது விதிமீறல். எனவே, வேளச்சேரி ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கும். இரு சக்கர வாகனத்தில் இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கொண்டு செல்லப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது” என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story