10 இடங்களிலும் வெற்றி பெற்று கோவை மாவட்டத்தை மீண்டும் தக்க வைத்த அ.தி.மு.க. கூட்டணி!


10 இடங்களிலும் வெற்றி பெற்று கோவை மாவட்டத்தை மீண்டும் தக்க வைத்த அ.தி.மு.க. கூட்டணி!
x
தினத்தந்தி 2 May 2021 11:25 PM GMT (Updated: 2021-05-03T04:55:02+05:30)

10 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் கோவை மாவட்டத்தை அ.தி.மு.க. கூட்டணி தக்க வைத்தது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. தொடக்கம் முதலே கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

குறிப்பாக மேட்டுப்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை வகித்தனர். அதுபோன்று கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அமுல்கந்தசாமி வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து பொள்ளாச்சி, சூலூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதுபோன்று கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. கடும் போட்டிக்கு இடையே கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா தனதாக்கியது.

இந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் தி.மு.க. வெற்றி பெற்று இருந்தது. மீதமுள்ள 9 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றி இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியையும் அ.தி.மு.க. தனதாக்கி உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 ெதாகுதிகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க. 9 இடங்களையும், கூட்டணி கட்சியான பா.ஜனதா ஒரு இடம் என்று 10 இடங்களையும் தனதாக்கி உள்ளது.

Next Story