வெளி மாநிலங்களில் ‘நீட்’ தேர்வு மையங்கள்


வெளி மாநிலங்களில் ‘நீட்’ தேர்வு மையங்கள்
x
தினத்தந்தி 6 May 2018 9:30 PM GMT (Updated: 2018-05-07T06:06:03+05:30)

2017 முதல் மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதித்தான் மருத்துவ படிப்பு, பல் மருத்துவ படிப்புகளில் சேரமுடியும் என்றநிலை தொடங்கி விட்டது.

கடந்த ஆண்டு 82 ஆயிரத்து 272 மாணவர்கள் ‘நீட்’ தேர்வை 149 மையங்களில் எழுதினர். இந்த ஆண்டு ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதினார்கள். இவர்களுக்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, நாமக்கல், சேலம், வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 10 நகரங்களில் 170 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏறத்தாழ 5,700 மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா, சிக்கிம் போன்ற வெளிமாநிலங்களில் உள்ள மையங்களில் தேர்வு எழுத வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. தகவல் அனுப்பியிருந்தது.

மாணவர்கள் இதனால் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே மையம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதும், மாணவ–மாணவிகளும் அவர்கள் பெற்றோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. கூடுதல் மையங்களை திறக்கவேண்டிய சி.பி.எஸ்.இ. அந்த கடமையைச் செய்யாமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்றம் தேர்வு மையங்களை மாற்ற தேவையில்லை என்றுகூறி, சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை 3–ந் தேதி ரத்து செய்தது. 2 நாட்களே தேர்வுக்கு கால அவகாசம் இருந்ததால் மாணவர்கள் பெரும் குழப்பத்துக்குள்ளானார்கள்.

ராஜஸ்தான் செல்ல வேண்டுமென்றால் எந்த ரெயிலில் முன்பதிவு கிடைக்கும்? எல்லா மாணவர்களாலும் விமான பயணம் மேற்கொள்ள அவர்களின் பொருளாதார வசதி இடம் கொடுக்காது.

தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓரவஞ்சனையா? குறைவான மையங்கள் அமைக்கப்பட்டு, தமிழக மாணவர்களை மட்டும் இவ்வாறு அலைக்கழித்ததற்கு யார் காரணம்? சி.பி.எஸ்.இ.யா? தமிழக கல்வித்துறையா? என்பதற்கு சி.பி.எஸ்.இ. விளக்கம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு தொலைதூரங்களில் போய் தேர்வு எழுத வேண்டியநிலையில், மாணவர்களுக்கு எவ்வளவு இன்னல்? அவர்கள் மனநிலை எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கும்?

அந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பயணங்களை வகுப்பதிலும், தங்கும் இடங்களை முடிவு செய்ய வேண்டியதிலும், புது இடத்தில் மையங்களை கண்டுபிடிப்பதிலுமே அவர்கள் கவனம் இருந்தால் தேர்வுக்கான கடைசிநேர தயாரிப்புக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது.

தமிழக அரசு மாணவ–மாணவிகளுக்கும், அவர்களுடன் துணைக்குச் செல்லும் ஒருவருக்கும் சேர்த்து, 2 பேருக்கு ரெயிலில் 2–ம் வகுப்பு கட்டணமும், ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டது. ஆனால் இதை வாங்கிவிட்டு, பயணம் செய்ய மாணவர்களால் முடியவில்லை.

கேரளா அரசாங்கம் தமிழ்ச்சங்கங்களோடு இணைந்து  ரெயில் நிலையங்களிலும், பஸ் நிலையங்களிலும் தகவல் மையங்கள் அமைத்து, அங்கு தமிழ் தெரிந்த ஆசிரியர்கள், அதிகாரிகளை நியமித்து மையங்கள் இருக்கும் இடங்களுக்கும், தங்கும் இடங்களுக்கும் வழிகாட்டி வசதிகள் செய்து கொடுத்தது நிச்சயம் பாராட்டுக்குரியது. இந்த மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், தமிழ் சமுதாயம் நன்றி கடன்பட்டு இருக்கிறது.

அடுத்த ஆண்டு தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டியநிலை ஏற்படாமல் இருக்க கூடுதல் மையங்களை திறக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தமிழக கல்வித்துறை ஒருங்கிணைந்து செய்ய வேண்டும்.


Next Story