பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத போராட்டங்கள்


பொதுமக்களுக்கு  பாதிப்பு இல்லாத  போராட்டங்கள்
x
தினத்தந்தி 4 Sep 2018 10:00 PM GMT (Updated: 4 Sep 2018 1:45 PM GMT)

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு திரைப்படத்தில், சென்னை அடையாறில் இருந்து நுங்கம்பாக்கத்துக்கு வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு செல்லும் நடிகர் விவேக்கை, விஜய் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்வார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு திரைப்படத்தில், சென்னை அடையாறில் இருந்து நுங்கம்பாக்கத்துக்கு வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு செல்லும் நடிகர் விவேக்கை, விஜய் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்வார். வழிநெடுக போராட்டங்கள், மறியல்கள் உள்பட பல காரணங்களுக்காக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டு, கடைசியில் திருப்பதி சென்றுவிட நேர்வதுபோல ஒரு நகைச்சுவை காட்சி வெளிவரும். படத்தில் சிரிக்க வைக்கும் அதே காட்சியைபோல, அவ்வளவு தூரத்துக்கு இல்லாவிட்டாலும், சென்னை உள்பட பெரிய நகரங்களில் பொதுமக்கள் செல்லும் இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் நடப்பதால் போக்குவரத்து தடைபட்டு அல்லது போக்குவரத்து திருப்பிவிடப்பட்டு செல்லவேண்டிய இடங்களுக்கு உரியநேரத்தில் செல்லமுடியாத நிலைமை அடிக்கடி ஏற்படுகிறது. 

வெகுகாலமாகவே பொதுமக்கள், இதுபோன்ற போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் மீது ஒரு அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். உங்கள் கோரிக்கைக்காக நீங்கள் போராடுவது நியாயம்தான். அதனால் எங்களுக்கு ஏன் பாதிப்பு ஏற்படவேண்டும்?, நாங்கள் ஏன் அவதிப்படவேண்டும்? என்ற உணர்வு பிரதிபலிக்கிறது. பொதுமக்களின் இந்த மனஓட்டத்தை எதிரொலிக்கும்வகையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளனர். தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவரான பி.அய்யாக்கண்ணு மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்கவேண்டும் என்று தொடர்ந்த வழக்கு தனிநீதிபதி விசாரணைக்குப்பிறகு, பெஞ்சு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசாங்க தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன், ‘மெரினாவில் போராட்டம் நடத்த அரசாங்கம் யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை. போராட்டங்களை ஒழுங்குபடுத்த அரசுக்கு உரிமை இருக்கிறது. எந்த இடங்களில் போராட்டங்கள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தலாம் என்று நிர்ணயிக்க அரசுக்கு உரிமை இருப்பதை உச்சநீதிமன்றமே அங்கீகரித்துள்ளது’ என்று வாதிட்டார். 

நீதிபதிகள், மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது என்று தீர்ப்பளித்து, ‘‘போராட்டம் நடத்துவதற்கு உள்ள உரிமை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலுக்கு தங்களுக்கு உரிமை இருப்பதுபோல அனுமதி கேட்கிறார்கள்’’ என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். நீதிபதி சுப்பிரமணியன் வழங்கிய தீர்ப்பில், ‘யாருக்கும் நான் இந்த இடத்தில்தான் போராட்டம் நடத்துவேன், வேறு எங்கேயும் போராட்டம் நடத்தமாட்டேன்’ என்று சொல்வதற்கு உரிமை கிடையாது. போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்குவது என்பது அரசியல் சட்டத்தில் தகுந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுதான் என்று கூறப்பட்டுள்ளது. நீதிபதி சசிதரன் இந்த தீர்ப்பில் பேச்சுரிமை வழங்கப்பட்டிருப்பதுபோல, மற்றவர்கள் பேசுவதை கேட்காமல் இருப்பதற்கும், இடைஞ்சல் இல்லாமல் தூங்குவதற்கும், அமைதியை விரும்புவதற்கும் உரிமை இருக்கிறது. விரும்பாத மக்கள் கண்டிப்பாக என் பேச்சை கேட்டுத்தான் ஆகவேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது என்று கூறியிருக்கிறார். மெரினாவுக்கு மட்டும் கூறப்பட்டுள்ள இந்த தீர்ப்பு ஒரு வரலாற்றுமிக்க சிறந்த தீர்ப்பாகும். தமிழகஅரசு இதை வழிகாட்டுதலாக எடுத்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் இனிமேல் இதுபோல் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்துவதற்கு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத இடங்களில் இடம் ஒதுக்கவேண்டும். அவர்கள் பிரதிநிதிகளை, அமைச்சர்களோ, அதிகாரிகளோ சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்க தயங்கக்கூடாது. ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது. 

Next Story