எனக்கு ரே‌ஷன் அரிசி வேண்டாம்


எனக்கு ரே‌ஷன் அரிசி வேண்டாம்
x
தினத்தந்தி 5 Sep 2018 10:00 PM GMT (Updated: 5 Sep 2018 10:23 PM GMT)

உணவு மானியத்தை பொறுத்தமட்டில், ரே‌ஷன் கார்டுகளுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. மொத்தம் 1 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரத்து 93 ரே‌ஷன் கார்டுகளில், 10 லட்சத்து 42 ஆயிரத்து 711 கார்டுகளுக்கு மட்டும் இலவச அரிசி வழங்கப்படுவதில்லை.

லவசங்கள், மானியங்களுக்கான செலவை குறைக்கும்வகையில், சமையல் கியாஸ் சிலிண்டருக்கான, மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண செலவுக்கான மானிய தொகையை ‘எங்களுக்கு வேண்டாம்’ என்று விட்டுக் கொடுக்க விரும்புகிறவர்கள் விட்டுக்கொடுக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோள் நல்ல பலனை கொடுத்து இருக்கிறது. தமிழக அரசை பொறுத்தமட்டில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு ரூ.75 ஆயிரத்து 723 கோடியாகும். உணவு மானியத்துக்காக மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

உணவு மானியத்தை பொறுத்தமட்டில், ரே‌ஷன் கார்டுகளுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. மொத்தம் 1 கோடியே 96 லட்சத்து 16 ஆயிரத்து 93 ரே‌ஷன் கார்டுகளில், 10 லட்சத்து 42 ஆயிரத்து 711 கார்டுகளுக்கு மட்டும் இலவச அரிசி வழங்கப்படுவதில்லை. மற்ற கார்டுகள் அனைத்துக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பெரும்பாலான கார்டுதாரர்கள் வீடுகளில் இலவச அரிசியை பயன்படுத்துவதில்லை. யாருக்காவது கொடுத்து விடுகிறார்கள். பலர் முறைகேடாக வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்து விடுகிறார்கள். ரே‌ஷன் அரிசியை கிலோ ரூ.5–க்கு வாங்கும் கடத்தல்காரர்கள் அதை பாலிஷ் செய்து அல்லது அப்படியே சேர்த்துவைத்து அண்டை மாநிலங்களில் கிலோ ரூ.20, ரூ.25, ரூ.30 என்று விற்றுவிடுகிறார்கள். இதுபோன்ற நிலையை தடுக்க, தேனி மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ், எல்லோரும் பாராட்டத்தக்க நல்ல முயற்சியை எடுத்துள்ளார். எப்படி சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தொகையை பிரதமர் அறிவிப்புப்படி ‘‘விட்டுக்கொடுக்கிறோம்’’ என்று ஒரு திட்டம் நிறைவேற்றப்படுகிறதோ, அதுபோல இலவச அரிசி வேண்டாம் என்று சொல்பவர்கள் தாங்களே முன்வந்து விட்டுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். 

ஒவ்வொரு துறையாக அவர் நடத்தும் ஆய்வுக்கூட்டங்களில் அதிகாரிகளிடம், உங்கள் துறை ஊழியர்களிடம், ‘இலவச அரிசி வேண்டாம்’ என்று விரும்புகிறவர்கள் விட்டுக்கொடுக்கலாம் என்று வேண்டுகோள் விடுங்கள். பெருந்தன்மையோடு விட்டுக்கொடுப்பவர்களுக்கு 3 விதமான தேர்வை கொடுங்கள். ஒன்று அரிசி உள்பட அனைத்துப்பொருட்களும் வேண்டாம், முகவரி மற்றும் கார்டை அடையாளத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறோம் என்றும், இரண்டாவதாக அரிசி மட்டும் வேண்டாம் சர்க்கரை போன்ற மற்ற பொருட்களை வாங்கிக்கொள்கிறோம் என்றும், மூன்றாவதாக இப்போது எனக்கு அரிசி வேண்டாம் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் வாங்கிக்கொள்கிறோம் என்றும் கொடுத்து, அவர்கள் விரும்பினால் ஏதாவது ஒரு தேர்வை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி வருகிறார். இந்த முயற்சியை அவர் தொடங்கிய ஒருசில நாட்களிலேயே 160 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ‘எங்களுக்கு இலவச அரிசி வேண்டாம்’ என்று எழுதிக்கொடுத்து இருக்கிறார்கள். இது ஒரு நல்ல முயற்சியாகும். தொடர்ந்து இதுபோல அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டத்தில் வசதி உள்ளவர்கள் ‘இலவச அரிசி வேண்டாம்’ என்று கூறி தாங்களே முன்வந்து விட்டுக்கொடுக்க ஏற்பாடு செய்யவேண்டும். இந்த முயற்சிகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களோடு விட்டுவிடாமல், அனைத்து தரப்புக்கும் அரசு சார்பிலேயே அன்பான வேண்டுகோள் விடுக்கவேண்டும். மானியச்சுமை குறைந்தால், அந்த தொகையை அரசு நிச்சயமாக வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

Next Story