ஊரடங்கு முடிவு மக்கள் கையில்!


ஊரடங்கு முடிவு மக்கள் கையில்!
x
தினத்தந்தி 14 Jun 2021 8:12 PM GMT (Updated: 2021-06-15T02:23:03+05:30)

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த மாதம் 7-ந்தேதி பொறுப்பேற்றதில் இருந்தே, தன் முதல் கடமையாக, கொரோனா பரவலை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதில்தான் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது.

முதலில் ஊரடங்கு சற்று தளர்வுகளுடன் மே 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. ஆனால், 22-ந்தேதி அன்று 35,873 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 24-ந் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு எந்தவித 
தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அது நல்ல பலனையும் தந்தது. 31-ந்தேதி கொரோனா பாதிப்பு 27,934 ஆக குறைந்தது.

தொடர்ந்து, இந்த முழு ஊரடங்கு இந்த மாதம் 7-ந்தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டது. இதிலும் பாதிப்பு குறைந்தது. பிறகு சற்று தளர்வுகளுடன் நேற்று வரை (14-ந்தேதி) ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், 13-ந்தேதி 
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,016 ஆக குறைந்தது. இப்போது மேலும் ஒரு வார காலத்திற்கு, அதாவது 21-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், 
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் நோய்த்தொற்று பாதிப்பால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கருத்தில்கொண்டு, கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு என்றும், மற்ற 27 
மாவட்டங்களில் சற்று கூடுதலான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் அதைச்சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மிக்சி, கிரைண்டர், டிவி, 
பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், டீக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. வரப்போகிற காலங்களில் திருமண சீசன் வருகிறது. எனவே, நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் 
போன்றவற்றையும், மோட்டார் வாகன விற்பனை ஷோரூம்களையும் சமூக இடைவெளியுடன் திறக்க அனுமதிக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. மோட்டார் வாகன விற்பனைக்கு அனுமதி கொடுத்தால், மூடிக்கிடக்கும் மோட்டார் வாகன தொழிற்சாலைகள் திறக்கப்படுவதற்கும், தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

இதுபோல, தையல் கடைகள், தள்ளுவண்டி இஸ்திரி கடைகள் திறப்பதற்கும் அனுமதிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால், ஊரடங்கு முடிவுக்கு வருவது பொதுமக்கள் கையில்தான் இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பொதுமக்களுக்கு நல்லதொரு கோரிக்கையை விடுத்திருக்கிறார். “ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுகின்ற சங்கிலியை முதலில் உடைத்தாக வேண்டும். அதற்காகத்தான் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்தோம். ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முறையாகவும், முழுமையாகவும் கடைப்பிடித்ததால்தான் இந்த அளவு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது என்றுதான் சொன்னேனே தவிர, முழுமையாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன். முழு ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல மக்கள் நடந்துகொள்ளவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

எனவே, ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றால், கொரோனா பரவல் தணியவேண்டும். அது மக்கள் கையில்தான் இருக்கிறது. எப்படி, கனமழை பெய்யும்போது, மக்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதுபோல, தேவைப்பட்டால் மட்டும் குடையோ, மழைக்கோட்டோ அணிந்துகொண்டு வெளியே செல்வதைப்போல, இப்போது கொரோனா மழை பெய்யும் சூழ்நிலையிலும் தேவையில்லாமல் மக்கள் வெளியே செல்வதை தவிர்ப்பதையும், அவசியமாக செல்ல வேண்டிய நேரத்தில் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் தங்களது முழு முதல் கடமையாக கொள்ளவேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு தளர்வுகளும் வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர மக்களின் கட்டுப்பாடும், ஒத்துழைப்பும் மிகமிக அவசியம்.

Next Story