மாநில செய்திகள்

“நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்” ரசிகர்கள் மத்தியில், ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு + "||" + Rajinikanth's hot talk

“நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்” ரசிகர்கள் மத்தியில், ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

“நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்” ரசிகர்கள் மத்தியில், ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
“நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்” என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார்.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு கடந்த 15-ந் தேதி முதல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் அவர்களை சந்தித்து வந்தார்.

நேற்று கடைசி நாளாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசியதாவது:-

“ஒழுக்கமாக, கட்டுப்பாடாக வந்து என்னை நீங்கள் பார்த்தது, பழகியது மகிழ்ச்சியாக இருந்தது. ஒழுக்கம்தான் வாழ்க்கை. ஒழுக்கம் இல்லை என்றால் எந்த காலத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அரசியல் பிரவேசம்

நான் ரசிகர்களை சந்தித்த முதல் நாள் அவர்களிடம், ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சில விஷயங்களை சொன்னேன். அவை என் ரசிகர்களுக்காக நான் சொன்னது. அது பெரிய சர்ச்சையாகி வாதம் விவாதமாக மாறி ஒரு ரூபத்தை எடுக்கும் என்று அப்போது எதிர்பார்க்கவில்லை.

வாழ்க்கையில் எதிர்ப்பு, ஆதரவு இருப்பது சகஜம்தான். எதிர்ப்பு இல்லாமல் வளரவே முடியாது. அதுவும் அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். வாதம், விவாதங்கள் இருக்கலாம். ஆனால் சமூக வலைதளங்களில் (பேஸ்புக், டுவிட்டர்) சிலர் என்னை திட்டி எழுதுகிறார்கள். அது எனக்கு வருத்தமாக இல்லை. தமிழ் மக்கள் ஏன் இப்படி கீழ்த்தரமாக போய்விட்டார்கள் என்பதுதான் சங்கடமாக இருக்கிறது.

நான் பச்சை தமிழன்

நான் இங்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியாக வேண்டும். ரஜினிகாந்த் தமிழனா? என்ற கேள்வி வருகிறது. எனக்கு இப்போது 66 வயது ஆகிறது. 23 ஆண்டுகள்தான் கர்நாடகாவில் இருந்தேன். மீதி 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன். உங்க கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து ஒரு மராட்டியனாகவோ, கன்னடக்காரனாகவோ நான் இங்கு வந்து இருந்தாலும்கூட நீங்கள் என்னை ஆளாக்கி, அன்பு கொடுத்து, பெயர், புகழ், பணம் எல்லாவற்றையும் அள்ளிக்கொடுத்து ஒரு தமிழனாகவே ஆக்கி விட்டீர்கள்.

எனவே நான் பச்சைத் தமிழன். எங்கள் மூதாதையர்கள், அப்பா எல்லோரும் கிருஷ்ணகிரியில் பிறந்தவர்கள் என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன். நீங்கள் வந்து என்னை எங்கேயாவது போ, இங்கே இருந்து வெளியே போ என்று தூக்கி போட்டால் நான் இமயமலையில்தான் போய் விழுவேனே தவிர, வேறு எந்த மாநிலத்திலும் போய் விழ மாட்டேன்.

தமிழ் மக்கள் நல்ல மக்கள். நல்ல உள்ளங்கள் இருக்கிற இந்த பூமியில் இருப்பேன். இல்லாவிட்டால் சித்தர்கள் இருக்கிற இமயமலைக்கு போய் அங்கே இருப்பேன்.

மு.க.ஸ்டாலின்

என்னை வாழவைத்த தெய்வங்கள் நீங்கள். வாழவைத்தீர்கள். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். அதுபோல் என்னை வாழவைத்த தெய்வங்களும் நன்றாக இருக்க கூடாதா? என்னை மாதிரி அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை.

நீ என்ன சரி செய்வது? அதற்கு மற்றவர்கள் இருக்கிறார்களே என்று கேட்டால், ஆமாம் இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் எனக்கு நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ அடிக்கடி சொல்வார். ஸ்டாலினை மட்டும் சுதந்திரமாக செயல்பட விட்டால் மிகவும் நன்றாக செயல்படுவார். ஆனால் சுதந்திரமாக விடமாட்டார்கள்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் படித்தவர். விஷயம் தெரிந்தவர். நவீன சிந்தனையாளர். உலகமெல்லாம் சுற்றி வந்து இருக்கிறார். நல்ல கருத்துகள், நல்ல திட்டங்களை வைத்து இருக்கிறார்.

திருமாவளவன் தலித் மக்களுக்காக பாடுபடுகிறார். சீமான் ஒரு போராளி. அவருடைய சில கருத்துகளை கேட்டு நான் பிரமித்து போய் இருக்கிறேன்.

அந்த மாதிரி ஆட்கள் இருக்கிறார்கள். தேசிய கட்சிகளிலும் இருக்கிறார்கள். ஆனால் ‘சிஸ்டம்’ (அமைப்பு) கெட்டுப்போய் இருக்கிறதே. ஜனநாயகம் கெட்டுப்போய் உள்ளதே. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் எண்ண ஓட்டங்களே மாறிப்போய் இருக்கிறதே.

மாற்றம் வேண்டும்

எனவே சிஸ்டத்தையே மாற்ற வேண்டும். மக்களின் சிந்தனை ஓட்டத்தை மாற்ற வேண்டும்.

ஒரு மாற்றத்தை உண்டாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும். அது எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டியது.

சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி விமர்சிப்பதை ரசிகர்கள் பொருட்படுத்த வேண்டாம். எதிர்ப்பு இருந்தால்தான் நாம் வளர முடியும். ஒரு செடியை வளர்க்க வேண்டும் என்றால் கூட முதலில் குழி தோண்ட வேண்டும். பிறகு விதையுடன் மண்ணையும், உரத்தையும் கலந்து குழிக்குள் போட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.

மூடிய பிறகு அதை அப்படியே விட்டு விடமாட்டோம். நன்றாக அழுத்தி, அமுக்குவோம். அப்போதுதான் அது நன்றாக வளரும். அதுபோல் இந்த அவதூறுகள், திட்டுகள், நிபந்தனைகள் எல்லாம் நாம் வளர்வதற்கு உரம் மாதிரி. அதை நிறைய போட்டால்தான் செடி மாதிரி நன்றாக வளர்ந்து வெளியே வருவோம். விமர்சிப்பவர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே நமக்கு உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள்.

புத்தர் கதை

ஒரு தடவை புத்தர் தனது சீடர்களுடன் பயணம் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஏழெட்டு பேர் அவரை வழிமறித்து கன்னாபின்னாவென்று திட்டினார்கள். புத்தர் பதில் சொல்லாமல் மவுனமாக நின்றார். குரு எதுவும் சொல்லவில்லையே என்று சீடர்களும் பேசாமல் நின்றார்கள். திட்டி விட்டு அவர்கள் போனபிறகு சீடர்கள் கேட்டனர். என்ன குருவே இவ்வளவு திட்டிய பிறகும் எதுவும் பேசாமல் இருக்கிறீர்களே என்று.

அதற்கு புத்தர் சொன்னார், அவர்கள் திட்டிவிட்டு கொட்டி விட்டு போய் விட்டார்கள். அதை நான் எடுத்துக்கவில்லையே. அதனால் அவர்களே அதை கொண்டு போய் விட்டனர் என்று சொன்னார்.

போர் வரும்போது...

பழைய காலத்தில் ராஜாக்களிடம் படை பலம் இருக்கும். அந்த படை லட்சக்கணக்கில் இருக்காது. ஒரு பத்தாயிரம், ஐந்தாயிரம் என்று அவர்களால் எவ்வளவு வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு படைகளை வைத்து இருப்பார்கள்.

ஆனால் போர் என்று வரும்போது, எல்லா ஆண் மக்களும் படையுடன் சேர்ந்து போரிடுவார்கள். அதுவரை அந்த ஆண் மக்கள் அவரவர் வேலைகளை, கடமைகளை செய்துகொண்டு இருப்பார்கள். அப்படி உழைப்பதால் அவர்கள் உடம்பு வலுவாக இருக்கும். வீர விளையாட்டுகள் வைக்கப்பட்டதே அவர்களை வீரர்களாக ஆக்குவதற்குத்தான்.

ஜல்லிக்கட்டு, கம்புச்சண்டை, கபடி, குஸ்தி எல்லாமே அவர்களை பலசாலிகள் ஆக்குவதற்காகத்தான். அவர்கள் கடமைகளை செய்துகொண்டே இருப்பார்கள். போர் வரும்போது எல்லோரும் இறங்கி அவர்கள் மண்ணுக்காகவும், சுயமானத்துக்காகவும் போராடுவார்கள்.

அந்த மாதிரி எனக்கும் கடமைகள் இருக்கிறது. தொழில் இருக்கிறது. வேலை இருக்கிறது. அதுபோல் உங்களுக்கும் கடமைகள் இருக்கிறது. தொழில் இருக்கிறது. வேலையும் இருக்கிறது.

நீங்கள் ஊருக்கு செல்லுங்கள். உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். தொழிலை பார்த்துக் கொள்ளுங்கள். போர் வரும்போது பார்த்துக்கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான். நன்றி.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.