மாநில செய்திகள்

புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும்; தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + Close up newly opened sand quarries; Dr. Ramadas asserted to the Government of Tamil Nadu

புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும்; தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும்; தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் இப்போது உள்ள மணல் குவாரிகள் அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளில் மூடப்படும் என்றும், அதன்பின் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் எடுக்க தடை விதிக்கப்படும் என்றும் சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த அரசு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அடுத்த 3 ஆண்டுகளில் ஆறுகளில் மணல் எடுக்க தடை விதிக்கப்படும் என்றால் இப்போது உள்ள மணல் குவாரிகள் படிபடியாக மூடப்பட வேண்டும். ஆனால் புதிது புதிதாக மணல் குவாரிகளை திறப்பது இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் செயலாகவே அமையும்.

மணல் குவாரிகள் உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைதல் உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், புதிய குவாரிகளை திறந்து தமிழகத்தை பாலைவனமாக்கி விட கூடாது.

மணல் குவாரிகள், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தும் மக்களை அடக்குமுறை மூலம் முடக்கி விடலாம் என அரசு நினைக்கிறது. இந்திய வரலாற்றில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க முயன்ற சர்வாதிகாரிகள் தான் மண்ணை கவ்வி இருக்கிறார்களே தவிர, மக்கள் போராட்டம் ஒருபோதும் வீழ்ந்தது இல்லை.

இவ்வரலாற்றை உணர்ந்து தமிழகம் முழுவதும் புதிதாக திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட வேண்டும். மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், ‘பா.ம.க. தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், அவற்றில் பணியாற்றி வந்த 15 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே டாஸ்மாக் பணியாளர்களில் உபரியாக உள்ள தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் பிற துறைகளில் அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பணிகளை வழங்க அரசு முன் வர வேண்டும். அவர்கள் தவிர டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.