மாநில செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் வீடியோ விவகாரம்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு + "||" + MLAs Video issue: Governor directs State Government to take action

எம்.எல்.ஏ.க்கள் வீடியோ விவகாரம்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு

எம்.எல்.ஏ.க்கள் வீடியோ விவகாரம்:  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு
தமிழக எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட வீடியோ விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை,

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சாதகமாக செயல்பட எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டது என்பதற்கான வீடியோ தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் வெளியானது.  இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 17ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.

அவருடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, துரைமுருகன், அபுபக்கர் ஆகியோரும் சென்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் பேர விவகாரத்தில் முறையான விசாரணை தேவை என ஆளுநரை சந்தித்த மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.  இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆளுநருடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வீடியோ விவகாரம் பற்றி பேச சட்டமன்றத்தில் அனுமதி கிடைக்கவில்லை.

சட்டப்படியும், விதிமுறைகளின்படியும் மீண்டும் புதிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.  சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும்.  அதன்பின் ஆட்சியை கலைக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம்.  இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என கூறினார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்ட வீடியோ விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அதனுடன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அளித்த அறிக்கையையும், சி.டி.யையும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கும், தலைமை செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.