ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரை ராணுவம் முற்றிலுமாக மீட்டது

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகரை ஈராக் ராணுவம் நேற்று முற்றிலுமாக மீட்டது.
மொசூல்,
ஈராக் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல், டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வந்த இந்த நகரை சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றிக் கொண்டனர்.
மேலும் மொசூல் நகரில் தங்களது இயக்கத்தினரை அதிக அளவில் குவித்தனர். சிரியாவின் சில பகுதிகளையும், ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய மொசூல் நகரையும் இணைத்து அதை தனி நாடாகவும் அறிவித்தனர்.
மொசூல் சுற்றி வளைப்பு
இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன் தீவிர தாக்குதலை ஈராக் ராணுவம் தொடங்கியது. இரு தரப்பினருக்கும் இடையே போர் உக்கிரம் அடைந்ததால் உயிர் பிழைப்பதற்காக 9 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கானோர் போரில் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ஈராக் ராணுவம் கூட்டுப் படையினரின் உதவியுடன் மொசூல் நகரின் நாலாபுறத்தையும் சுற்றி வளைத்தது. குறிப்பாக டைக்ரிஸ் நதியின் மேற்கு கரை பகுதியில் ராணுவம் படைகளை குவித்தது.
உச்சக்கட்ட போர்
தப்ப வழியின்றி ஐ.எஸ். பயங்கரவாதிகள் மொசூல் நகர மக்களை, மனித கேடயங்களாக பயன்படுத்தி சண்டையில் ஈடுபட்டனர். இதனால் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் ராணுவம் சற்று நிதானம் காட்டியது. குறுகிய தெருக்களையும், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியிலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு மீட்டர் தூரம் என்ற அளவிற்கு முன்னேறி தாக்குதலை தொடர்ந்தது. அதே நேரம் பயங்கரவாதிகள் தப்பித்து விடாதவாறு முற்றுகையையும் நீடித்தது. கடந்த வாரம் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த அல் நூரி மசூதியை மீட்டது.
இந்த நிலையில் ஈராக் ராணுவத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று உச்சக்கட்ட போர் நடந்தது. தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதிகள் வீடுகளுக்குள் மறைந்து கொண்டே ராணுவத்தினர் மீது ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் கையெறி குண்டுகளை வீசிக் கொண்டே எந்திர துப்பாக்கிகளாலும் சுட்டனர்.
முற்றிலுமாக மீட்பு
ராணுவத்தினரும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் வெடிக்கும் சத்தமும், எந்திர துப்பாக்கிகளால் சுடும் சத்தமும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதியின் வான்பரப்பில் கரும்புகை மண்டலம் சூழ்ந்து காணப்பட்டது.
மேலும், பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் ராணுவம் அவர்களின் தாக்குதலை எளிதாக முறியடித்தது. ஏராளமான பயங்கரவாதிகள் ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தப்பி ஓடினர்.
சிலர் மட்டும் மனிதவெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தினர். ஆனால் ராணுவம் சாதுர்யமாக செயல்பட்டதால் அதற்கும் பலன் இல்லாமல் போனது. இறுதியில் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ராணுவம் முற்றிலுமாக மீட்டது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தவெற்றியை நாட்டு மக்களிடம் அறிவித்த பிரதமர் ஹைதர் அல்-அபாதி, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. மொசூல் நகரம் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
போரினால் சிக்கி பெரும் சேதத்துக்கு உள்ளான மொசூல் நகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மட்டுமே 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.6,500 கோடி) தேவைப்படும் என்று ஐ.நா.சபை மதிப்பிட்டு உள்ளது.
இந்த போரில் 500-க்கும் அதிகமான பெரிய கட்டிடங்களும், 5 ஆயிரத்துக்கும் மேலான வீடுகளும் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






