தேசிய செய்திகள்

பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவோம், சிறைக்கு போகவும் அஞ்சவில்லை: மம்தா பானர்ஜி ஆவேசம் + "||" + Will play aggressive role in Parliament; not afraid to go to jail: Mamata Banerjee

பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவோம், சிறைக்கு போகவும் அஞ்சவில்லை: மம்தா பானர்ஜி ஆவேசம்

பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவோம், சிறைக்கு போகவும் அஞ்சவில்லை: மம்தா பானர்ஜி ஆவேசம்
பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவோம் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்தார்.
கொல்கத்தா,

பாராளுமன்ற குளிர்காலத் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் இந்த கூட்டத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் செயலாற்ற வேண்டிய முறை பற்றி அறிவுரைகளை வழங்குவதற்காக அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, ‘நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எழுந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தவறிய மோடியின் அரசை எதிர்த்தும், கண்டித்தும் பாராளுமன்றத்தில் பிரச்சனை எழுப்புமாறு எங்கள் கட்சி எம்.பி.க்களுக்கு தெரிவித்துள்ளேன்

பாராளுமன்றத்தில் நாங்கள் ஆக்ரோஷமாக போராடுவோம். சிறைக்கு சென்றாலும் செல்வோமே தவிர யாருக்கும் நாங்கள் தலை வணங்க மாட்டோம். இதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்போம். அதற்கு இதுதான் உகந்த நேரமாகும். இதுதொடர்பாக, மற்ற கட்சிகளுடன் பேசியுள்ளோம்.பா.ஜ.க. தலைமையிலான இந்த அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பூட்டான், நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் இருந்த நட்புறவு நாசமாகியுள்ளது. வங்காளதேசம் நாட்டு எல்லைப்பகுதி வழியாக அங்கிருக்கும் பயங்கரவாதிகள் தாராளமாக நமது நாட்டு எல்லைக்குள் நுழைகிறார்கள். இதை தடுப்பதற்கு மத்திய புலனாய்வு முகமைகள் எதுவும் செய்வதில்லை. இதனால், அதிகம் பாதிக்கப்படுவது (மேற்கு வங்காளம் மக்கள்) நாங்கள்தான். 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு மற்றும் மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை இந்த அரசின் மிகப்பெரிய ஊழலாகும். இதை எதிர்த்தும் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் அட்டூழியங்களை எதிர்த்தும் பாராளுமன்றத்தில் எங்களது குரல் ஓங்கி ஒலிக்கும். இந்த அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகதான் ஜனாதிபதி தேர்தலில் மீரா குமாரை ஆதரித்தோம்” இவ்வாறு அவர் கூறினார்.