தேசிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்; தலைமை செயலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் வரிசையில் நின்று வாக்கு அளித்தனர் + "||" + Presidential election In the Chief Secretariat, MLAs were standing in line

ஜனாதிபதி தேர்தல்; தலைமை செயலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் வரிசையில் நின்று வாக்கு அளித்தனர்

ஜனாதிபதி தேர்தல்; தலைமை செயலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் வரிசையில் நின்று வாக்கு அளித்தனர்
ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, தலைமை செயலகத்தில் தமிழக எம்.எல்.ஏ.க்கள் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர். பின்னர் ஓட்டுப்பெட்டி டெல்லி கொண்டு செல்லப்பட்டது.

சென்னை,

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஓட்டுப்பதிவு தொடங்கும் நேரம் 10 மணி என்றாலும், தலைமை செயலக வளாகத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் சீக்கிரமாகவே வந்துவிட்டனர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காலை 8 மணியளவில் வந்தார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 8.30 மணியில் இருந்து வரத்தொடங்கினர். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 9.20 மணிக்கு வந்தார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 8.50 மணிக்கு வரத்தொடங்கினர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 9.10 மணிக்கு வருகை தந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காலை 9 மணிக்கு மேல் வந்தனர்.

ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையில் 4 மேஜைகள் இருந்தன. முதல் மேஜையில் 3 வாக்குப்பதிவு அலுவலர்கள் அமர்ந்திருந்தனர். பக்கத்தில் இருந்த மேஜையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பூபதி அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. பூபதியின் மேஜைக்கு அருகே இருந்த மேஜையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, பார்வையாளர் அன்ஷு பிரகாஷ் அமர்ந்திருந்தனர். இந்த மேஜைகளுக்கு எதிரே முகவர்களுக்கான மேஜை போடப்பட்டு இருந்தது.

காலை சரியாக 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல் ஓட்டை 10.02 மணிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவு செய்தார். முன்னதாக முதல் மேஜையில் இருந்த முதல் வாக்குப்பதிவு அலுவலர், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரையும், அகில இந்திய அளவிலான எம்.எல்.ஏ.க்கள் வரிசை பட்டியலில் உள்ள எண்ணையும் (3702) வாசித்தார். அவரிடம் இருந்த பதிவேட்டில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.  ஓட்டுச்சீட்டையும், பேனாவையும் வாங்கிக்கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதல் தனி அறைக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் ஓட்டு பெட்டியில் வாக்குச்சீட்டை போட்டுவிட்டு, அவர் வெளியே சென்றார்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால், மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாக்களித்தனர். அவர்களை தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மருத்துவ காரணங்களுக்காக சென்னைக்கு வந்திருந்த கேரளா எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) ஆகியோர் ஓட்டு பதிவு செய்தனர். எம்.எல்.ஏ.க்கள் வரிசையில் நின்று வாக்கு அளித்தனர்.

ஓட்டுப்போடுவதற்கு முன்பு, எம்.எல்.ஏ.க்களிடம் இருந்த செல்போன், பேனா போன்றவை வாங்கி கொள்ளப்பட்டன. அவை தனியாக ஓரிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

பகல் 12 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. கடைசி ஓட்டை செம்மலை பதிவு செய்தார்.  தி.மு.க. தலைவரும் திருவாரூர் எம்.எல்.ஏ.வுமான கருணாநிதி உடல் நிலை காரணங்களுக்காக, வாக்கு செலுத்த வரவில்லை.  தமிழகத்தில் பதிவான வாக்குகள் அடங்கிய ஓட்டுப் பெட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு இரவு விமானம் மூலம் டெல்லி கொண்டுசெல்லப்பட்டது.