மாநில செய்திகள்

ஆற்றுமணலுக்கு பதிலாக ‘எம் சான்ட்’ பயன்படுத்தி அரசு கட்டிடங்கள் கட்டும் பணி தொடக்கம் + "||" + Construction of government buildings using 'sand sand' begins

ஆற்றுமணலுக்கு பதிலாக ‘எம் சான்ட்’ பயன்படுத்தி அரசு கட்டிடங்கள் கட்டும் பணி தொடக்கம்

ஆற்றுமணலுக்கு பதிலாக ‘எம் சான்ட்’ பயன்படுத்தி அரசு கட்டிடங்கள் கட்டும் பணி தொடக்கம்
ஆற்றுமணலுக்கு பதிலாக ‘எம் சான்ட்’ பயன்படுத்தி அரசு கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கி உள்ளது.

சென்னை,

கட்டிடப்பணியில் ஈடுபடும் அனைவரும் இதனை பயன்படுத்த வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆற்று மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக கட்டுமான தொழில்கள் தேக்கமடைந்ததுடன், தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். இதனை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.  அதன்படி ஆற்று மணலுக்கு மாற்றாக ‘தயாரிக்கப்பட்ட மணல்’ (எம் சான்ட்) பயன்படுத்தப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இது ‘நொறுக்கப்பட்ட கல் மணல்’ என்றும் ஆங்கிலத்தில் ‘கிரஸர் ஸ்டோன் சான்ட்’ என்றும் அழைக்கப்படுகிறது.

‘எம் சான்ட்’ பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் 52 அரசு கட்டிடங்களின் கட்டுமான பணிக்கு ‘எம் சான்ட்’ பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சென்னையில் மருத்துவ கல்லூரி கட்டிடங்கள், இதர அரசு அலுவலக கட்டிடங்களுக்கு முழுமையாக ‘எம் சான்ட்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஆன்லைன் விற்பனை முறையில் மணல் தேவைக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மாநிலம் முழுவதும் பொதுப்பணித்துறை செயல்படுத்தி வரும் கட்டிடங்களுக்கு ‘எம் சான்ட்’ என்ற மணலை பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது ‘எம் சான்ட்’ மூலம் அரசு கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதேபோன்று கட்டிடங்கள் கட்டும் அனைவரும் ‘எம் சான்ட்’ பயன்படுத்தலாம்.

‘எம் சான்ட்’ அதிகம் பயன்படுத்த தொடங்கினால் வரும் 3 ஆண்டுகளில் ஆறுகளில் இருந்து மணல் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ‘எம் சான்ட்’ முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் இயற்கை வளங்கள் மேம்படுத்தப்படும். நிலத்தடி நீர் மட்டமும் உயர வாய்ப்பு உள்ளது.

ஆற்றுமணலை விட அதிக கடினமான உறுதி தன்மை கொண்ட ‘எம் சான்ட்’ பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக குவாரிகளில் உள்ள கழிவுகளை கலந்து ‘எம் சான்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் மணலை பயன்படுத்த கூடாது. மணலை கையில் எடுத்து தேய்த்து பார்த்தால் கையில் குவாரி டஸ்டு என்று அழைக்கப்படும் கழிவுகள் ஓட்டாத தன்மை இருந்தால் தான் அவை தரமானவை என்று பொருள் கொள்ள வேண்டும். துல்லியமாக கண்டறிவதாக இருந்தால் சென்னை கிண்டியில் உள்ள தமிழக அரசு கட்டிட ஆராய்ச்சி நிலையம் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ‘எம் சான்ட்’ தரத்தை நாம் அறிந்து கொள்ள முடியும்.

வி.எஸ்.ஐ. எந்திரம் மூலம் நல்ல கற்களை உடைத்து தயாரிக்கப்படும் ‘எம் சான்ட்’ அனைத்து கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும். இது ஆற்று மணலை விட கூடுதல் பலமும், உழைக்கும் திறனும் கொண்டது.