மாநில செய்திகள்

தமிழகத்தை காப்பாற்ற மக்கள் ஒன்று திரள வேண்டும் மு.க.ஸ்டாலின் ஆவேசம் + "||" + People must mobilize to save Tamil Nadu MK Stalin's anger

தமிழகத்தை காப்பாற்ற மக்கள் ஒன்று திரள வேண்டும் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

தமிழகத்தை காப்பாற்ற மக்கள் ஒன்று திரள வேண்டும் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
இங்கே நடப்பது பா.ஜ.க. ஆட்சி என்றும், தமிழகத்தை காப்பாற்ற மக்கள் ஒன்று திரள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,

நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தாம்பரத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீரபாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, மாவட்டத்தலைவர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இறுதி போராட்டம்

இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கடுத்தக்கட்டமாக என்ன போராட்டத்தை நடத்துவது, எந்த வகையில் நடத்துவது, அப்படி நடத்தப்படக்கூடிய போராட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்று, இன்னும் இரண்டொரு நாட்களில், மீண்டும் அனைத்துகட்சித் தலைவர்களுடைய கூட்டத்தை கூட்டி அதில் கலந்து பேசி பிறகு முடிவெடுத்து, விரைவிலே அறிவிக்கவிருக்கிறோம். அப்படி அறிவித்து நடைபெறக்கூடிய போராட்டம், நான் உறுதியோடு சொல்கிறேன், அதுதான் இந்த ஆட்சிக்கு அறிவுறுத்தக்கூடிய இறுதிப் போராட்டமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது.

இன்றைக்கு நீட்டால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை அகற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில் மட்டும் நடத்துகிறோம் என்று நீங்கள் கருதிவிடக் கூடாது. இப்போது நாட்டிற்கும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்த நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும், மக்களை காப்பாற்ற வேண்டுமென்றால், நாம் உடனடியாக கிளர்ந்து எழுந்திட வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி அல்ல, பா.ஜ.க. ஆட்சி

நீட் தேர்வைப் பொறுத்த வரையில் ஓராண்டிற்கு விலக்களிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம், அந்த விலக்கை பெற்றுத்தருவோம் என உறுதிமொழி தந்தீர்களே? பாதுகாப்பு துறை மந்திரியாக பொறுப்பேற்று இருக்கும் நிர்மலா சீதாராமன், ஏற்கனவே இந்தப் பிரச்சினை பற்றி பேசும்போது ஓராண்டிற்கு விலக்கு அளிக்கப்படும் என உறுதி தந்தாரே?

அதற்கெல்லாம் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள் திருச்சி மேடைக்கு வருகிறபோது பதில் சொல்ல வேண்டுமென கேட்டேன். நானும் அதனை கூர்ந்து கவனித்தேன். என்னென்ன பேசுகிறார்கள்? என்னென்ன பதில் சொல்கிறார்கள் என்று, இதுவரை நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத வக்கற்ற, வகையற்ற ஒரு ஆட்சி மத்தியிலே இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது, அ.தி.மு.க. ஆட்சியல்ல, மத்தியில் இருக்கும் பா.ஜ.க.வின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது.

வாட்ஸ் அப் கவிதை

இரண்டு நாட்களாக வாட்ஸ் அப்பில் கூட ஒரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. மத்தியில் இருக்கும் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு மக்கள் படும் துன்பங்களை பற்றி கவிஞர் பழனிபாரதி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதற்கு என்ன தலைப்பு என்றால், புதிய இந்தியா. விவசாயிகளுக்கு வாய்க்கரிசி போடுவது தான் புதிய இந்தியா, நெசவாளர்களுக்கு சவத்துணி நெய்வது தான் புதிய இந்தியா. சில்லறை வியாபாரிகளுக்கு நெற்றிக்காசு வைப்பது தான் புதிய இந்தியா, மாட்டுக்கறி உண்பவரை கொன்று கொன்று மனிதக்கறி உண்பது தான் புதிய இந்தியா, இல்லாதவனின் கோவணத்தை பிடுங்கி இருக்கிறவனுக்கு கம்பளம் விரிப்பது தான் புதிய இந்தியா, மாநிலக் கல்வி உரிமையை பறித்து சமூகநீதி புத்தகம் கிழித்து உலக மூலதனத்திற்கு விசிறி விடுவது தான் புதிய இந்தியா, செத்து செத்து பிறக்குது புதிய இந்தியா, பிறந்து பிறந்து சாகுது புதிய இந்தியா என கவிஞர் பழனிபாரதியின் கவிதை வாட்ஸ் அப் மூலம் பரவிக் கொண்டிருக்கிறது என்றால் இந்த நிலையில் தான் மத்தியில் இருக்கும் ஆட்சி இருக்கின்றது.

மெஜாரிட்டியை நிரூபித்து விட்டு கேட்க வேண்டும்

நான் தலைவராகவே முடியவில்லை செயல் தலைவராக வந்திருக்கிறேன் என்றும், எப்படி முதல்-அமைச்சர் ஆகப்போகிறேன் என்றும், முதல்-அமைச்சர் பதவிக்கு கனவு காண்கிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். உமக்கு மானம் இருந்தால், சூடு இருந்தால் மெஜாரிட்டியை நிரூபித்து விட்டு அந்த கேள்வியை கேள், நான் பதில் சொல்கிறேன். அதுக்கு வக்கு வகையில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு 19 என்ற செய்தி 22 ஆகிவிட்டது என்று கேள்விபட்டேன். உடனே மீண்டும் கவர்னரிடம் தேதி வாங்கி நான், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் எல்லாம் சென்று சந்தித்து தெளிவாக அவரிடத்தில் சொன்னோம். பலமுறை கடிதம் அளித்துவிட்டோம், ஜனாதிபதியிடமும் வலியுறுத்தி விட்டோம், இந்தப் பிரச்னை குறித்து இதுதான் நாங்கள் உங்களை சந்திக்கும் கடைசி முறையாக இருக்க வேண்டும். சந்திக்க மாட்டோம் என சொன்னால், நீதிமன்றத்தை நாடுவோம், மக்கள் மன்றத்தை நாடுவோம் என தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன் அதைத்தான் எழுதியும் கொடுத்து இருக்கிறேன். அடுத்த நாள் பார்த்தால் விமானத்தில் மும்பைக்கு சென்று விட்டார் என செய்தி வந்தது.

காப்பாற்ற வேண்டும்

அந்த அலட்சியத்தின் காரணமாக தான் நீதிமன்றத்திலே வழக்கு பதிவு செய்திருக்கிறோம். அந்த வழக்கு வர இருக்கிறது. நிச்சயம் ஜனநாயகத்தின் அடிப்படையில் நமக்கு ஒரு நல்ல தீர்ப்பு வர இருக்கிறது.

எது எப்படியாக இருந்தாலும், தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தாலும் இல்லையென்று சொன்னாலும், நிச்சயமாக உறுதியாக நம்முடைய அனைத்துக் கட்சித் தலைவர்களோடு கலந்துபேசி, தமிழகத்திற்கு விடியலை பெற்றுத் தர தமிழக மக்களையெல்லாம் ஒன்று திரட்டுவோம். காரணம், நீட் பிரச்சினைக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக நிர்வாகம் ஸ்தம்பித்து போகியிருக்கும் நிலை, மெஜாரிட்டி இல்லாத ஆட்சி, இந்த நிலையில் இருக்கும் தமிழகத்தை காப்பாற்ற வேண்டுமென சொன்னால் தமிழக மக்கள் ஒன்றுதிரள வேண்டும்.

மிகப்பெரிய போரை நாம் தொடுத்திட வேண்டும். அதற்கான காலம் கனிந்து விட்டது. அதற்கு எடுத்துக்காட்டாக அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு நீட் தேர்வை அகற்ற நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், நாம் எண்ணக்கூடிய அந்த எண்ணம் வெற்றிபெற அனைவரும் துணைநிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.