தேசிய செய்திகள்

இந்தியா - ஜப்பான் கூட்டறிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள் + "||" + Pak based terror groups in India-Japan statement

இந்தியா - ஜப்பான் கூட்டறிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள்

இந்தியா - ஜப்பான் கூட்டறிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள்
மும்பை, பதன்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை பாகிஸ்தான் நீதியின் முன்நிறுத்த வேண்டும் என இந்தியா, ஜப்பான் வலியுறுத்தி உள்ளது.

காந்திநகர், 

இந்திய, ஜப்பான் இடையேயான 12-வது உச்சிமாநாடு, காந்திநகர் மகாத்மா காந்தி மந்திரில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயும் பங்கேற்று இரு தரப்பு விஷயங்கள், பிராந்திய பிரச்சினைகள், உலகளாவிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் ஜப்பானிய தொழில் நகரங்கள் அமைக்க இறுதி செய்யப்பட்டுள்ளன என அறிவித்தார். 

பேச்சு வார்த்தையை தொடர்ந்து பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

கூட்டறிக்கையில் 2008 மும்பை தாக்குதல் மற்றும் 2016 பதன்கோட் தாக்குலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பாகிஸ்தான் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. அல் கொய்தா, ஐ.எஸ்., மற்றும் பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக இந்தியாவும், ஜப்பானும் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயங்கரவாதம் என்பது உலகளாவிய ஒரு அம்சம், அதை அணுவளவுகூட சகித்து கொள்ளாமல் உலகளாவிய நடவடிக்கையின் மூலம் ஒடுக்க வேண்டும் என்ற கருத்தை இந்திய, ஜப்பான் பிரதமர்கள் பகிர்ந்து கொண்டனர். பயங்கரவாத இயக்கங்களை தடை செய்வது தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் எண். 1267-ஐயும் பிற தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துமாறு அனைத்து உறுப்பு நாடுகளையும் இந்தியாவும், ஜப்பானும் கேட்டுக்கொள்கின்றன என கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.