மாநில செய்திகள்

மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை கடலோர காவல் படை மறுப்பு + "||" + The Coast Guard did not fire the fishermen

மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை கடலோர காவல் படை மறுப்பு

மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை கடலோர காவல் படை மறுப்பு
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று கடலோர காவல் படை மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,

இதுகுறித்து மத்திய பத்திரிகை தகவல் நிறுவனம் (பாதுகாப்புப் பிரிவு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாக் நீரிணைப் பகுதியில் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் 13-ந்தேதியன்று பிற்பகல் 2.40 மணியளவில் இந்திய கடலோர காவல்படை ரோந்துப் பணியில் இருந்தது. அப்போது யெகோவா யீரே என்ற பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகை விசாரணைக்கு அழைத்தது.

அந்தப் படகு பெரிய மீன்வலையை வீசி, இழுத்துக்கொண்டிருந்தது. இது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நடைமுறையாகும். கடலோர காவல்படை கப்பல் நெருங்கியபோது, மீன்பிடி வலைகளைப் போட்டுவிட்டு யெகோவா யீரே படகு விரைந்து சென்றது.

மீண்டும் மீண்டும் எவ்வளவோ எச்சரிக்கைகளைக் கொடுத்தும் அதை யாரும் நிறுத்தவில்லை. அப்போது அதை கடலோர காவல்படை கப்பல் துரத்தியது. 50 நிமிட துரத்தலுக்குப் பின்பு படகு நிறுத்தப்பட்டது.

பின்னர் அந்த படகில் இருந்தவர்கள் விசாரிக்கப்பட்டனர். கடலோர காவல் படை கப்பலைக் கண்டதும் மீன்பிடி படகை ஏன் விரைவாகச் செலுத்தினர் என்று விசாரித்தார்கள். பாதுகாப்பு சோதனைக்காக நிறுத்துவதற்கு உத்தரவிட்டும் அதை நிறுத்தாமல் போனதால் அவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

பாக் நீரிணைப் பகுதியில் எந்த மீனவரையும் கடலோர காவல்படை துப்பாக்கியால் சுடவில்லை. யெகோவா யீரே படகில் இருந்தவர்கள் கூறுவதுபோல, துப்பாக்கி சூட்டின் மூலமாகவோ அல்லது எந்த வகையினாலோ யாருக்கும் காயத்தையும், சிராய்ப்பையும் கடலோர காவல்படையினர் ஏற்படுத்தவில்லை.

விசாரணைக்காக நிறுத்தக்கோரி நிறுத்தாமல் சென்றதாலும், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை செய்ததாலும், நடத்தப்பட்ட விசாரணை மற்றும் விடப்பட்ட எச்சரிக்கையை திசை திருப்புவதற்கு அந்த மீனவர்கள் அப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.