தேசிய செய்திகள்

சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் புதிய மனு + "||" + Stop the prison sentence In the Supreme Court Perarivalan New petition

சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் புதிய மனு

சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் புதிய மனு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.  சிறப்பு விசாரணை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வெளிநாடுகளை சேர்ந்த குற்றவாளிகள் சிலருக்கான தொடர்பு குறித்து கண்டறிய சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமையை 1997–ம் ஆண்டு மத்திய அரசு அமைத்தது. இந்த முகமை, விசாரணையின் முன்னேற்றம் குறித்து ரகசிய அறிக்கையை ஒவ்வொரு மாதமும் சென்னையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்சு (தடா) கோர்ட்டில் தாக்கல் செய்து வருகிறது.

இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘சிறப்பு விசாரணை முகமை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சிறையில் வாடும் என்னையும் தொடர்புபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பல தகவல்கள் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது ராஜீவ்காந்தியை கொல்ல பயன்படுத்திய வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கையின் நகலை ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் வைத்து சி.பி.ஐ. தரப்பில், கோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் தரப்பு வக்கீல்கள் இடைக்கால மனு தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியும் இதுவரை பெல்ட் வெடிகுண்டு குறித்த புலனாய்வை முடிக்கவில்லை. இந்த வழக்கில் மனுதாரர் 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனுதாரருக்கு எதிரான ஒரே சாட்சி வி.தியாகராஜன் என்ற சி.பி.ஐ. அதிகாரி அவரிடம் பதிவு செய்ததாக கூறப்படும் வாக்குமூலம் மட்டுமே. ஆனால் 2013–ம் ஆண்டில் அந்த அதிகாரி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தன்னிடம் இருந்த பேட்டரிகள் எதற்காக பயன்படுத்தப்படும் என்பது குறித்து ஏதும் அறியாதவராக பேரறிவாளன் இருந்தார் என்று கூறியிருக்கிறார்.

எனவே, இந்த கொலை வழக்கில் வெளிநாடுகளை சேர்ந்த குற்றவாளிகள் பற்றிய புலனாய்வு தொடர்பாக பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை அல்லது வழக்கை முடித்து வைக்கும் வரை மனுதாரரின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அந்த மனுவை படித்த நீதிபதிகள், 1999–ம் ஆண்டில் வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எங்களால் மாற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பேரறிவாளன் தரப்பில், ஒரு மனிதர் 2 பேட்டரிகளை வைத்திருந்ததற்காக 26 ஆண்டுகள் சிறையில் கழித்து இருக்கிறார். அதே நேரத்தில் பெல்ட் வெடிகுண்டு விவகாரத்தில் நிக்சன் என்கிற சுரேன் சந்தேகத்துக்கு உரிய நபர் என்று பல்நோக்கு சிறப்பை விசாரணை முகமை கூறியுள்ளது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அவரை விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதே போல, விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் செய்ததாக கூறப்படும் குமரன் பத்மநாபா தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவரையும் விசாரிக்க வேண்டும். இந்த விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பேரறிவாளன் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வக்கீல்கள் கூறினர்.

இதனை கேட்ட நீதிபதிகள், பேரறிவாளன் மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 6–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.