மாநில செய்திகள்

நடுக்கடலில் சிக்கித் தவித்த 662 மீனவர்கள் மீட்பு பாதுகாப்புத்துறை அறிவிப்பு + "||" + 662 fishermen recovered in the middle of the sea

நடுக்கடலில் சிக்கித் தவித்த 662 மீனவர்கள் மீட்பு பாதுகாப்புத்துறை அறிவிப்பு

நடுக்கடலில் சிக்கித் தவித்த 662 மீனவர்கள் மீட்பு பாதுகாப்புத்துறை அறிவிப்பு
‘ஒகி புயலால் நடுக்கடலில் சிக்கி தவித்த 662 மீனவர்கள் கடற்படையால் மீட்கப்பட்டு உள்ளனர்’ என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

இதுகுறித்து பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கர்நாடகா, கேரளா, லட்சதீவு ஆகிய கடலோர பகுதிகளில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க இந்திய கடலோர காவல்படை 15 ரோந்து மற்றும் பிற கப்பல்களையும், 4 விமானங்களையும், 1 ஹெலிகாப்டரையும் மீட்புப் பணிக்காக முடுக்கிவிட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து மும்பை வரை 1,365 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கடலோர பகுதியில், கடலுக்குள் 190 கிலோ மீட்டர் தூரமும், கடலோர காவல் படை கப்பல்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. விமானம் மூலம் கரையில் இருந்து கடல் உள்ளே 555 கிலோ மீட்டர் பரப்பளவில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ்.சோர் கப்பல், பிட்ரா தீவின் வடபகுதியில் பழுதாகி நின்று தத்தளித்து கொண்டிருந்த குளச்சலை சேர்ந்த ‘எஸ்.டி.டாமியன்’ என்ற மீன்பிடி படகையும், அதில் இருந்த 13 மீனவர்களையும் மீட்டு கவாரட்டி தீவில் சேர்த்தனர். மீட்கப்பட்ட மீனவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் முதலுதவி சிகிச்சை கடலோர காவல் படையால் கொடுக்கப்பட்டது.

அதேபோல் ஐ.சி.ஜி.எஸ்.அபிநாவ் கப்பல் ‘ஆல் மைட்டி காட்’ என்ற மீன்பிடி படகையும் அதில் இருந்த 12 மீனவர் களையும் மீட்டு கொச்சி துறைமுகத்தில் சேர்த்தனர். ஐ.சி.ஜி.எஸ்.வைபவ் கப்பல் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து 30 மீனவர்கள், 2 கடலோர படை வீரர்கள் மற்றும் 33 பத்திரிகையாளர்களுடன் ஆழப்புலா கடற்பகுதியில் இருந்து 185 கிலோ மீட்டர் மேற்கு பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டபோது கடலில் 2 இறந்த உடல்களை மீட்டு நேற்று இரவு விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வந்தனர்.

தூத்துக்குடி கடற்பகுதியில் கடந்த 5-ந்தேதி 7 மீனவர்களுடன் கடலுக்குள் தேட சென்ற ஐ.சி.ஜி.எஸ்.அபிராஜ் கப்பல் தேடுதல் பணி முடிந்து கரை திரும்பியது. இதையடுத்து ஐ.சி.ஜி.எஸ்.ஆதேஷ் கப்பல் தூத்துக்குடி கடற்பகுதியில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்திய கிழக்கு கடல் பகுதியில் 3 இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 662 பேர் மீட்கப்பட்டுள்ளனர், அதில் 259 மீனவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தின் வீரவால், மராட்டிய மாநிலம் தேவகார்க் மற்றும் மாள்வான், கர்நாடகாவின் கார்வார், லட்சதீவின் அன்டோர்த், கால்பேனி, பிட்ரா, கில்டான், அகாத்தி, சீலெட் ஆகிய பகுதிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 139 மீன்பிடி படகுகளுடன், 1660 மீனவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள கற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சி.ஜி.டொர்நியர் கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு தமிழகம் மற்றும் ஆந்திரா மீனவர்களை கரைக்கு திரும்புமாறு எச்சரித்துள்ளது.

கிழக்கு கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த 9 கப்பல்கள் தமிழகம் மற்றும் ஆந்திரா கடலில் உள்ள மீனவர்களை பத்திரமாக அருகில் இருக்கும் கரையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.