தேசிய செய்திகள்

பிரதமரை ‘இழிபிறவி’ என்று கூறிய மணிசங்கர் அய்யர் இடைநீக்கம் காங்கிரஸ் அதிரடி + "||" + Mani Shankar Ayyar suspended

பிரதமரை ‘இழிபிறவி’ என்று கூறிய மணிசங்கர் அய்யர் இடைநீக்கம் காங்கிரஸ் அதிரடி

பிரதமரை ‘இழிபிறவி’ என்று கூறிய மணிசங்கர் அய்யர் இடைநீக்கம் காங்கிரஸ் அதிரடி
பிரதமர் மோடியை ‘இழிபிறவி’ என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், ராகுல் காந்தி அறிவுறுத்தலுக்கு பிறகு மன்னிப்பு கேட்டார்.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திரமோடி, நேற்று டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தை திறந்து வைத்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியை பெயர் குறிப்பிடாமல் அவர் விமர்சித்தார்.

அவர் பேசுகையில் ‘ஓட்டுக்காக அம்பேத்கர் பெயரை பயன்படுத்தும் சில கட்சிகள், தேசத்தை கட்டமைத்ததில் அவர் ஆற்றிய பங்கை மறைக்க முயல்கின்றன. இந்த முயற்சியில் ஈடுபடும் குடும்பத்தை காட்டிலும், அம்பேத்கரின் சிந்தனைகள்தான் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளன. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், அவரது கொள்கைகளை மக்கள் நினைவில் இருந்து அகற்ற முடியாது’ என்றார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், ‘அம்பேத்கரின் திறமையை அங்கீகரித்தவர், நாட்டின் முதல் பிரதமர் நேரு. ஆனால், மோடி ஒரு இழிபிறவி. அவருக்கு மரியாதை என்பதே தெரியாது. இந்த நிகழ்ச்சியில், இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் என்ன?’ என்றார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, மணிசங்கர் அய்யர் கருத்துக்கு பதில் அளித்தார். மோடி பேசியதாவது:-

நன்கு படித்த ஒருவர், என்னை ‘இழிபிறவி’ என்கிறார். எனது சாதியை கேள்விக்கு உள்ளாக்குகிறார். இது, குஜராத்துக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு. இதற்கு பதிலுக்கு பதிலாக யாரும் லாவணி பாட வேண்டாம் என்று கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். குஜராத் மைந்தனுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கு குஜராத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்து உங்கள் பதிலை அளியுங்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.

இதற்கிடையே, இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.

அவர், ‘பா.ஜனதாவும், பிரதமரும் காங்கிரசை தாக்குவதற்கு அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், காங்கிரஸ் மாறுபட்ட கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டது. பிரதமர் குறித்து மணிசங்கர் அய்யர் பயன்படுத்திய வார்த்தைகளை நான் ஏற்கவில்லை. ஆகவே, அவர் சொன்னதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரசும், நானும் எதிர்பார்க்கிறோம்’ என்று கூறி இருந்தார்.

இதையடுத்து, மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரினார். அவர் கூறியதாவது:-

நான் பிரதமரை ‘கீழானவர்’ என்றுதான் கூறினேன். அவரது பிறப்பு குறித்த பொருளில் கூறவில்லை. நான் வந்த கலாசாரம், என்னை அப்படி பேச வைக்காது. இருப்பினும், பிரதமர் அதை திரித்து கூறி இருந்தால், இது காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இருப்பினும், மணிசங்கர் அய்யர் மீது நேற்று இரவு காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் ஊடக பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘இந்த நடவடிக்கை, காங்கிரசின் காந்திய தலைமையையும், அரசியல் எதிரிகள் மீது வைத்துள்ள மரியாதையையும் காட்டுகிறது. இதுபோன்று நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா?’ என்றார்.

குஜராத்தில் நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கும்நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.