மாநில செய்திகள்

போகி பண்டிகை காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு + "||" + Air pollution in Chennai due to bogey festivities

போகி பண்டிகை காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

போகி பண்டிகை காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
போகி பண்டிகை காரணமாக சென்னையில் நேற்று கடந்த ஆண்டைவிட காற்று மாசு அதிகரித்ததாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.
சென்னை, 

போகி பண்டிகை காரணமாக சென்னையில் நேற்று கடந்த ஆண்டைவிட காற்று மாசு அதிகரித்ததாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் போகி பண்டிகைக்கு முன்பும், போகி பண்டிகையன்றும் கத்திவாக்கம், மணலி, கொளத்தூர், அம்பத்தூர், திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், கோடம்பாக்கம், தியாகராயநகர், வளசரவாக்கம், மீனம்பாக்கம், பெசன்ட்நகர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் போன்ற சென்னை மாநகராட்சி எல்லைக்கு 15 இடங்களில் காற்றுத்தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்படி, கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு ஆகிய வாயுகளின் அளவு அனைத்து 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவுக்கு (80 மைக்ரோகிராம்/ கனமீட்டர்) 2 நாட்களிலும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

போகி நாளான நேற்று அதிக ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை மற்றும் காற்று வேகம் குறைந்ததால் காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் பரவாமல் ஒரே இடத்தில் நிலை கொண்ட காரணத்தினால், சென்னையில் 13 மண்டலங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாசு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது.

போகி பண்டிகையன்று பொதுமக்கள் நலன் கருதி 24 மணி நேரம் இயக்கும் வகையில் 044– 2235 3153 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்க கோரப்பட்டு இருந்து. ஆனால் எந்தவித புகாரும் வாரியத்தால் பெறப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.