மாநில செய்திகள்

காவிரியில் தண்ணீர் திறக்க கோரிக்கை கர்நாடக முதல்-மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் + "||" + Palaniasamy's letter to the Chief Minister of Karnataka

காவிரியில் தண்ணீர் திறக்க கோரிக்கை கர்நாடக முதல்-மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

காவிரியில் தண்ணீர் திறக்க கோரிக்கை கர்நாடக முதல்-மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
காவிரியில் தண்ணீர் திறந்து விடும் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மகர சங்கராந்தி மகிழ்ச்சி பண்டிகையை முன்னிட்டு உங்களுக்கும், கர்நாடகா மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள காவிரி நடுவர் மன்றத்தின் 5.2.2007 தேதியிட்ட இறுதித் தீர்ப்பின்படி, பிலிகுண்டுலுவில் இருந்து 192 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) தண்ணீரை தமிழகம் பெறவேண்டும் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

ஆனால் 9.1.2018 தேதி நிலவரப்படி 179.871 டி.எம்.சி. தண்ணீர் தரப்பட வேண்டிய நிலையில், 111.647 டி.எம்.சி. நீர் மட்டுமே பிலிகுண்டுலுவில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது. இதனால் 68.224 டி.எம்.சி. பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

2017-18-ம் ஆண்டு பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த அக்டோபர் 2-ந் தேதியன்றுதான் தண்ணீர் திறக்க முடிந்தது. பொதுவாக ஜூன் 12-ந் தேதியன்று தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் நீர் வரத்து குறைவு காரணமாகவும், அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததாலும் இந்த நிலை ஏற்பட்டது.

ஆரம்பத்தில் மிக உதவிகரமாக இருந்த வடகிழக்கு பருவ மழையினால் சம்பா பயிர் செய்வது உடனே தொடங்கினாலும் கூட, கடந்த அக்டோபர் இறுதிக் கட்டத்தில் மழை அதிகமாகி அனைத்தும் அழிந்துபோய்விட்டன. பெருமழையின் வேகத்தை தாங்காத அந்த இளம் பயிர்கள் அழிந்துவிட்டன.

எனவே காவிரி டெல்டா விவசாயிகள் மீண்டும் அந்த பயிரை பயிரிட வேண்டியதுள்ளது. அந்த பயிர் வளரக் கூடிய முக்கிய காலகட்டத்தில் தண்ணீர் தேவை உள்ளது. மேலும் ஜனவரி மாதத்தையும் தாண்டி பயிர் செய்ய வேண்டும்.

கடந்த 2016-17-ம் ஆண்டில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவாக இருந்ததால் காவிரி டெல்டா விவசாயிகள் பயிர்களை இழந்தனர். 12-ந் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 21.27 டி.எம்.சி.யாக உள்ளது. இதில் 16.27 டி.எம்.சி. நீரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

கோடை காலத்தில் பயிர்களுக்கும், குடிநீர் தேவைக்கும் இந்த தண்ணீரின் அளவு போதாது. கர்நாடகத்தில் ஏற்கனவே பயிர் செய்யும் காலம் முடிந்துவிட்டது. அங்கு 12-ந் தேதி நிலவரப்படி நீர்த்தேக்கத்தில் 49.82 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

குடிநீர் தேவை மற்றும் காலப்பயிர்களின் தேவைகளுக்காக நீரை தேக்கி வைத்துக்கொண்டு, குறைந்தபட்சம் 15 டி.எம்.சி. தண்ணீரையாவது தமிழகத்தின் பாசன தேவைகளுக்கு அளிக்கலாம்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதார நிலையை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். தற்போதுள்ள பயிர்களை பாதுகாப்பதற்காக உடனே 7 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடுமாறு உங்கள் அதிகாரிகளுக்கு நீங்கள் உத்தரவிடவேண்டும். மீதமுள்ள தண்ணீரை இரண்டு வாரங்களுக்குள் திறந்துவிட ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.