கிரிக்கெட்

பரபரப்பான கட்டத்தில் 2-வது டெஸ்ட் :4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்ப்பு + "||" + India three down chasing 287

பரபரப்பான கட்டத்தில் 2-வது டெஸ்ட் :4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்ப்பு

பரபரப்பான கட்டத்தில் 2-வது டெஸ்ட் :4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்  இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்ப்பு
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. #indvsSA #freedomseries
செஞ்சூரியன்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில், 335 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 307 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரைவார்த்தது. 

டி வில்லியர்ஸ் (80 ரன்கள்) , எல்கர் (61 ரன்கள்) ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 91.3 ஓவர்கள் தாக்கு பிடித்த தென் ஆப்பிரிக்க அணி, 258 ரன்களில் ஆட்டமிழந்தது.  இந்திய அணி தரப்பில்  அதிகபட்சமாக சமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம், 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை துவங்கியது. 

இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. முரளி விஜய் (9 ரன்கள்), லோகேஷ் ராகுல் ( 4 ரன்கள்) அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 5  ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்து தத்தளித்து வருகிறது.

நாளை ஒருநாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி வெற்றி பெற இன்னும் 252 ரன்கள் தேவையுள்ளது. புஜாரா 11 ரன்களிலும் பார்த்தீவ் படேல் 5 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இன்னும் 7 விக்கெட்டுகளே கைவசம் உள்ளதால், இந்திய அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற போராட வேண்டி இருக்கும். இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தால், இந்திய அணி தொடரை இழக்க நேரிடும் என்பதால், இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.