தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்ற இரண்டு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் கைது + "||" + 2 Terrorists Caught In J&K, Police Says Pak Gave Visas For Arms Training

பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்ற இரண்டு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் கைது

பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்ற இரண்டு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் கைது
பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்ற ஜம்மு காஷ்மீரைச்சேர்ந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத் அருகே உள்ள  பர்மா டவுன் என்ற இடத்தில் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து  அவர்களை அதிபயங்கர பயங்கரவாதிகளாக மாற்றும் முகாம்கள் இயங்குகின்றன. குறிப்பாக லஷ்கர் இ தொய்பா இயக்கம் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாத செயல்களுக்காக பயிற்சி அளிக்கும் இத்தகைய முகாம்களில், ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச்சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள், இந்த பயிற்சி முகாமில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒசாமா, நவீத், ஹட்டாஃப், ஹன்ஸாலா, அட்னான், ஒமர் ஆகிய அடைமொழிப் பெயர்களால் பயங்கரவாத தாக்குதலில் தேர்ச்சி பெற்ற தளபதிகள் சிலர் இந்த முகாம்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த முகாம்களில் சேர்ந்து பயங்கரவாத  பயிற்சி பெற்று, வாகா எல்லைப்பகுதி வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு திரும்பிவந்த இரு இந்தியர்களை பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர்.  காஷ்மீரில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுடன் இணைவதற்குள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கும் பாகிஸ்தான், உரிய விசா வழங்கியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உரிய விசா பெற்று வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்று அங்கு பயங்கரவாத பயிற்சியை பெற்றுள்ளனர்.  

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கிரீரி பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத் பட், இன்னொருவர் பட்டான் பகுதியை சேர்ந்த முஹம்மது அஷ்ரப் மிர் என தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரிடமும் பயங்கரவாத பயிற்சி எவ்வாறு அளிக்கப்படுகிறது போன்ற விவரங்களை பெற  தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கூறப்பட்ட தகவல்களை ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.