மாநில செய்திகள்

மக்கள் விரோத அரசாக செயல்படுவதாக குற்றச்சாட்டு அ.தி.மு.க.வில் இருந்து அனிதா குப்புசாமி விலகல் + "||" + From AIADMK Anita Kuppasamy distortion

மக்கள் விரோத அரசாக செயல்படுவதாக குற்றச்சாட்டு அ.தி.மு.க.வில் இருந்து அனிதா குப்புசாமி விலகல்

மக்கள் விரோத அரசாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
அ.தி.மு.க.வில் இருந்து அனிதா குப்புசாமி விலகல்
மக்கள் விரோத அரசாக செயல்படுவதால் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,

அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும், நாட்டுப்புற பாடகியுமான அனிதா குப்புசாமி அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து அனிதா குப்புசாமி கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இருந்து நான் விலகி விட்டேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே எனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டேன். ஆனாலும் நான் செல்லும் இடங்களில் மக்கள் என்னிடம் வந்து, இன்னுமா அ.தி.மு.க.வில் இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

எனவே தான் அதிகாரப்பூர்வமாக என் முடிவை அறிவித்து இருக்கிறேன். தற்போதைய முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி, மக்கள் விரோத அரசாக செயல்படுகிறது. எனவே தான் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்தேன்.

கணவருக்கு துணைவேந்தர் பதவியா?

என் கணவருக்கு துணைவேந்தர் பதவியை கொடுக்காததால் தான் நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகியதாக கூறப்படுவதை முற்றிலும் மறுக்கிறேன். துணைவேந்தர் ஆகுவதற்கான அனைத்து தகுதிகளும் என் கணவருக்கு இருக்கிறது. தேர்வுக்குழு தேர்வு செய்த 5 பேரின் பட்டியலில் அவர் பெயரும் இருந்தது. ஆனால் தகுதி இருந்தும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு முறைகேடுகள் நடப்பது இப்போது தான் எனக்கு தெரிகிறது. நான் தினமும் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்திக்கிறேன். இதனால் அவர்களின் எண்ணங்கள் எனக்கு புரியும். அதை தான் நான் இப்போது கூறுகிறேன். என்னை பொறுத்தவரையில் எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கணவர் கருத்து

இது குறித்து அவரது கணவரும், நாட்டுப்புற பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி தினத்தந்தி நிருபரிடம் கூறும்போது, ‘அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக என் மனைவி எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. இதை நான் வரவேற்கிறேன்’ என்றார்.