மாநில செய்திகள்

ஊதிய உயர்வு ஒப்பந்த பிரச்சினை: மின்வாரிய ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம் + "||" + Wage rise contract issue: Electricity workers strike tomorrow

ஊதிய உயர்வு ஒப்பந்த பிரச்சினை: மின்வாரிய ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு ஒப்பந்த பிரச்சினை:
மின்வாரிய ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்
மின்வாரிய ஊழியர்கள் நாளை திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக சி.ஐ.டி.யு. உள்பட 10 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சென்னை,

மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். அந்தவகையில், கடந்த 1.12.2015 முதல் ஊதிய உயர்வு வழங்காமல் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் பணிச்சுமைக் கான வாரிய ஆலோசனை வழங்கவும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

இதுதொடர்பாக மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள், நிர்வாகத்தரப்பினரிடம் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் இறுதிப்படுத்தப்பட்ட ஊதிய உயர்வு, பணிச்சுமை விவரங்களை ஒப்பந்தத்தில் நடைமுறைப்படுத்தாமல் மின்வாரியமும் (நிர்வாகம்), தமிழக அரசும் காலதாமதம் செய்து வந்தது.

இதையடுத்து சி.ஐ.டி.யு., பி.எம்.எஸ்., என்.எல்.ஓ., டி.என்.பி.இ.ஓ. உள்பட 10 தொழிற்சங்கங்கள் 16-ந் தேதி (நாளை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. இதற்கிடையில் கடந்த வாரத்தில் பணிச்சுமை தொடர்பாக நிர்வாகம் தரப்பில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவுடன், தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட ஊதிய உயர்வு, பணிச்சுமை தொடர்பாக கடந்த 12-ந் தேதிக்குள் ஒப்பந்தம் காணப்படும் என்று நிர்வாக தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி, கடந்த 12-ந் தேதி தொழிலாளர் நல துணை ஆணையர் தலைமையில், நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நடந்தது.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது நிர்வாகம் தரப்பில் வந்திருந்த பேச்சுவார்த்தை குழுவினர் பாதியிலேயே எழுந்து சென்றனர். எந்த ஒப்பந்தமும் காணப்படவில்லை. இதனால் அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், தொழிலாளர் நல துணை ஆணையர் சுமதி, 15-ந் தேதி (இன்று) சமரச பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அப்போது அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதாக இருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக தொழிலாளர் நல துணை ஆணையர் தொழிற்சங்கங்களுக்கு நேற்று பிற்பகலில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நிர்வாக காரணங்களுக்காக பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுகிறது. பேச்சுவார்த்தை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக லிமிடெட் நிர்வாகம் 1947 தொழிற்தகராறு சட்டத்தின்படி ஒரு பொது பயன்பாட்டு சேவை என்பதாலும், மின்சார சேவை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசிய சேவை என்பதாலும், ஊதிய உயர்வு தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாலும், பொதுமக்கள் நலன் கருதி 16-ந் தேதி அறிவித்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம்.

தொழில் அமைதி காத்திடுமாறும், சமரச பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு காணுமாறும் தொழிற்சங்கங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இக்காலத்தில் தொழிலாளர்களின் பணி நிலைமைகளில் எவ்வித மாற்றமும் செய்யாமல் ‘ஸ்டேட்டஸ்-குவா’ நிலையை கடைபிடிக்குமாறும் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் அறிவித்துள்ள அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் இதுதொடர்பான கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள சி.ஐ.டி.யு. அலுவலகத்தில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார்கள்.

ஆலோசனை முடிந்த பிறகு, மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் (சி.ஐ.டி.யு.), தேசிய தொழிலாளர் அமைப்பை(என்.எல்.ஓ) சேர்ந்த சாலமோன் ஆகியோர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

நாங்கள் வைத்த கோரிக்கைகள் மீது அரசோ, நிர்வாகமோ பேசுவதற்கு தயாராக இல்லை. மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்சார வாரியமும், தானும் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேசி வருவதாக கூறுகிறார். ஆனால் அப்படி யாரும் எங்களிடம் பேசவில்லை. மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் தங்களுடைய உரிமைகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டபடி 16-ந் தேதி (நாளை) வேலைநிறுத்தம் நடை பெறும். மின்வாரியத்தில் மொத்தம் 80 ஆயிரம் ஊழியர்களும், 15 ஆயிரம் அதிகாரிகளும் பணிபுரிகிறார்கள். இதில் எங்களை சார்ந்த தொழிற்சங்கங்களில் உள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.

மேலும், இதர தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களும் அவர்களுடைய தலைமையை மீறி எங்களுடன் கரம் கோர்ப்பார்கள்.

நாளை(இன்று) அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக எதாவது முடிவு எட்டப்பட்டால் வேலைநிறுத்தம் தொடர்பாக பரிசீலிப்போம். அப்படி எதுவும் முடிவு கிடைக்கவில்லை என்றால், 16-ந் தேதிக்கு பிறகு தொழிலாளர்களுக்கு நாங்கள் சேவகனாக இருந்து அவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் தொடருவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.