தேசிய செய்திகள்

நடிகை பிரியா வாரியர் சுப்ரீம் கோர்ட்டில் மனு + "||" + Actor Priya Varrier moves Supreme Court, wants the case against her viral song quashed

நடிகை பிரியா வாரியர் சுப்ரீம் கோர்ட்டில் மனு

நடிகை பிரியா வாரியர் சுப்ரீம் கோர்ட்டில் மனு
நடிகை பிரியா வாரியர், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #PriyaVarrier
புதுடெல்லி, 

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்துவரும் 18 வயது மாணவி பிரியா பிரகாஷ் வாரியர். இவர் ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் நடித்துவருகிறார். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாணிக்ய மலரய பூவி’ (முத்துப் பூவை போன்ற பெண்) என்ற பாடலில் பிரியா வாரியர் சக மாணவரை பார்த்து கண் சிமிட்டும் காட்சி உள்ளது.

கடந்த காதலர் தினத்தன்று இந்த கண் சிமிட்டும் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பிரியா வாரியர் ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்றார். அந்த பாடல் வரிகள் தங்களின் மத உணர்வை புண்படுத்திவிட்டதாக ஒரு சமுதாயத்தினர் புகார் கூறினர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் மராட்டிய மாநிலம் மும்பை ஆகிய இடங்களில் போலீசில் புகார் செய்யப்பட்டு அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரியா வாரியர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். பிரியா வாரியர் சார்பில் வக்கீல் பல்லவி பிரதாப் இந்த மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் பிரியா வாரியர் கூறியிருப்பதாவது:-

‘ஒரு அடார் லவ்’ படத்தின் பாடல் வரிகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மத உணர்வை புண்படுத்திவிட்டதாக கூறி கடந்த 14-ந் தேதி ஐதராபாத் பலக்னாமா போலீஸ் நிலையத்திலும், மும்பை போலீஸ் கமிஷனரிடமும் புகார் செய்யப்பட்டு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் அந்த படத்தின் இயக்குனர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த பாடலின் திரிக்கப்பட்ட, தவறான விளக்கங்களை காரணமாக கொண்டு புகார் செய்துள்ளனர். மற்ற சில மலையாளம் பேசாத மாநிலங்களிலும் இதுபோன்ற புகார்கள் எழுந்துள்ளன.

இது பாரம்பரியமாக கேரளாவின் மலபார் பிராந்தியத்தில் பாடப்படும் பாடல். இதில் முக்கியமானது, 1978-ம் ஆண்டு கேரளாவில் ஜப்பார் என்பவரால் கிராமிய பாடலாக இயற்றப்பட்டு, தலச்சேரி ரபீக் என்பவரால் முதலாவதாக பாடப்பட்டது. கடந்த 40 வருடங்களாக கேரளாவில் ஒரு கோடிக்கும் மேல் உள்ள முஸ்லிம் சமுதாயத்தினரால் இந்த பாடல் மகிழ்ச்சியாக பாடப்பட்டு வருகிறது. இந்த பாடல் திடீரென அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்திவிடாது.

எனவே அந்த பாடல் வரிகளை தவறாக புரிந்துகொண்டு பல மாநிலங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இது மனுதாரரின் வாழ்க்கை உரிமையையும், அரசியல்சாசனப்படி கருத்து தெரிவிக்கும் உரிமையையும் பாதித்துள்ளது.அந்த படம் இன்னும் முடிவடையவில்லை. அந்த படத்துக்கு ரூ.1½ கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அடிப்படை ஆதாரமற்ற புகார்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது ஒரு தடையாகவும், அப்பட்டமான சட்ட மீறல் நடவடிக்கையாகவும் உள்ளது. மனுதாரர் (பிரியா வாரியர்) இளம் கல்லூரி மாணவி. அந்த படத்தில் வெறுமனே நடித்ததற்காக அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்வதா?

எனவே அவர் மீது பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். நடிகை குஷ்பு கற்பு குறித்து கருத்து தெரிவித்ததற்காக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுவித்ததுபோல இந்த வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரியா வாரியர் மனுவில் கூறியுள்ளார்.