மாநில செய்திகள்

அம்ருதா ஜெயலலிதாவின் உறவினர் இல்லை ஐகோர்ட்டில் புகழேந்தி மனு + "||" + Amruta is not a relative of Jayalalithaa

அம்ருதா ஜெயலலிதாவின் உறவினர் இல்லை ஐகோர்ட்டில் புகழேந்தி மனு

அம்ருதா ஜெயலலிதாவின் உறவினர் இல்லை ஐகோர்ட்டில் புகழேந்தி மனு
அம்ருதா என்ற பெண், ஜெயலலிதாவின் உறவினர் இல்லை என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை,

ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ள அம்ருதா என்ற பெண், ஜெயலலிதாவின் உறவினர் இல்லை என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அம்ருதா. இவர், தன்னை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில், தன்னுடைய தாயார் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு குலவழக்கப்படி நடைபெறவில்லை. எனவே, ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து, குலவழக்கப்படி சடங்குகளை செய்து, மீண்டும் புதைக்க அனுமதிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்ந்துள்ள அம்ருதா யார்? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த விசாரணையின் அடிப்படையில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது.

அதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனுவில், அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்க அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவாளர் வி.ஏ.புகழேந்தி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ள அம்ருதா, 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்டார். அப்போது தான் ஜெயலலிதாவின் தூரத்து சொந்தம் என்றும் ஜெயலலிதாவை சந்திக்க தனக்கு உதவி செய்யும்படியும் அவர் என்னிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு, அம்ருதா குறித்து கூறினேன். அப்போது ஜெயலலிதா, அம்ருதாவை சந்திக்க மறுத்து விட்டார். அவர் தன்னுடைய உறவினர் கிடையாது என்றும் அவர் மோசடி பேர்வழி என்றும் கூறினார்.

தற்போது ஜெயலலிதா இறந்த நிலையில், விளம்பரத்துக்காகவும், உள்நோக்கத்துடனும் அவரது மகள் என்று கூறி அம்ருதா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே, என்னையும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.