மாநில செய்திகள்

காவிரி குறித்த எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு துரைமுருகன் கண்டனம் + "||" + Duraimurugan denounced Palanisamy's speech

காவிரி குறித்த எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு துரைமுருகன் கண்டனம்

காவிரி குறித்த எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு துரைமுருகன் கண்டனம்
காவிரி பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு, துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,

காவிரி பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு, துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி.மு.க. முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் மட்டுமல்ல, இன்றைக்கு பரபரப்போடு பேசப்படுகின்ற காவிரி பிரச்சினையை உள்ளடக்கிய பொதுப் பணித்துறைக்கும் அவர் தான் அமைச்சர். ஏன், வளமான நெடுஞ்சாலைதுறையும் அவரிடம் தான் இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் உருப் படியாக வழக்கை நடத்தாமல் வழக்கை கோட்டை விட்டு விட்டு 14.75 டி.எம்.சி. தண்ணீரையும் தாரை வார்த்து விட்டு, கைபிசைந்து நிற்கும் எடப்பாடி பழனிசாமி மகா குழப்பத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவர் காவிரி பிரச்சினையை பேசாமல் இருப்பது அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

1924-ம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் 1974-ம் ஆண்டுடன் முடிந்து போனது என்பது கர்நாடகத்தின் ஆதி முதல் வாதம் இல்லை. இல்லை இல்லை அந்த ஒப்பந்தம் தொடருவது என்பது தமிழ்நாட்டின் வாதம். கடந்த 30 ஆண்டுகளாக பேசி பேசி அலுத்து போன பிரச்சினை இது. இப்படியிருக்கையில் எடப்பாடி பழனிசாமி எப்படி லேப்சிடு என்று உச்சரிக்கலாம். இந்த ஆங்கில சொல்லுக்கு அகராதியை புரட்டினால் முடிந்து விட்டது என்று பொருள் சொல்லுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இதற்கு அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்து இருக்கும்.

இந்த தவறை இவர் மட்டுமல்ல, இவருடைய கட்சி எம்.பி.க்களே ஒருமுறை செய்தார்கள். காவிரிக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று அன்றைய பிரதமர் வி.பி.சிங்கை சந்தித்து மனு ஒன்றை அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் ஒன்றாக அன்று பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த என் தலைமையில் போவதென்று முடிவு. டெல்லி போன பிறகு அ.தி. மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் பின்வாங்கி விட்டார்கள். காங்கிரஸ் அ.தி. மு.க. தோழமை கட்சியாக இருந்தாலும் பிரதமரை சந்திக்க வைஜெயந்தி மாலா எங்களோடு வந்தார். இந்த குழுவுக்கு ஏட்டிக்கு போட்டியாக அ.தி.மு.க.வும் மனு ஒன்றை பிரதமரிடம் அளித்தார்கள்.

அந்த மனுவில் நடுவர் மன்றம் அமையுங்கள் என்று கோரிக்கை வைத்து விட்டு, எடப்பாடி பழனிசாமி சொன்னதை போலவே 1942 ஒப்பந்தம் 1974-ம் ஆண்டு முடிந்து விட்டது என்றும் மனுவில் எழுதி கொடுத்து விட்டார்கள். அ.தி.மு.க.வின் துரோக செயலை அன்றைக்கு தமிழக சட்டமன்றமே கண்டித்தது. வேண்டுமானால் சட்டமன்ற நூலகத்தில் பழைய நினைவுகளை எடுத்து படிக்கட்டும்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு சின்ன வேண்டுகோள். காவிரி பிரச்சினை பெரிய பிரச்சினை. மன்னாதி மன்னர்களை எல்லாம் குழப்பிடும் பிரச்சினை. நீங்களோ, பொண்ணு ஊருக்கு புதுசு என்பது போல் இந்த இலாகாவுக்கு புதுசு. நீங்கள் பொதுப்பணித்துறையில் எந்த பணியையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இப்படிப்பட்ட பணிகளை செய்யாமல் இருந்தால் அதுவே போதும். அடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி வரும். அப்போது அவர் இதையெல்லாம் பார்த்துக்கொள்வார்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.