தேசிய செய்திகள்

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு + "||" + Tamil Nadu: Will move Supreme Court against EC’s ruling on AIADMK symbol, says Dinakaran

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
புதுடெல்லி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை தங்கள் அணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தற்காலிகமாக கட்சி பெயரையும், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட பிரஷர் குக்கர் சின்னத்தையும் தங்கள் அணிக்கு ஒதுக்கவேண்டும் என்று இடைக்கால மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி ரேகா பாலி அமர்வு முன்பாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் கமிஷன் ஆகியோர் தரப்பிலான வாதங்கள் கடந்த வாரம் முடிவடைந்தன.

நேற்று அதே அமர்வில், டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதங்களை தொடர்ந்தனர்.

அவர்கள் தங்கள் வாதத்தில், “மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் இருப்பதால் தங்கள் அணிக்கு கட்சி பெயரையும், சின்னத்தையும் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுவது தவறான அணுகுமுறையாகும். சின்னம் ஒதுக்கீடு தொடர்பான இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெறுவதால் எங்களுக்கு கூறும் அதே அணுகுமுறையை கடைபிடித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்த அணிக்கு வழங்கப்பட்ட பெயர் மற்றும் சின்னத்துக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் அணி 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை கண்டிருக்கிறது. எனவே இந்த வெற்றி பெற்ற அணிக்கு அங்கீகாரம் வழங்காமல் சின்னத்தையும் வழங்க மாட்டோம் என்று கூறுவதற்கு தேர்தல் கமிஷனுக்கு எந்த உரிமையும், அதிகாரமும் கிடையாது” என்று வாதிட்டனர்.

இதற்கு நீதிபதி, ‘இந்த விஷயத்தில் இப்போது நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று கூறி இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.