மாநில செய்திகள்

தமிழக அரசியலில் காகித பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது - மு.க.ஸ்டாலின் + "||" + In Tamil politics Paper flowers can blossom But it does not smell- MK Stalin

தமிழக அரசியலில் காகித பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது - மு.க.ஸ்டாலின்

தமிழக அரசியலில் காகித பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது - மு.க.ஸ்டாலின்
தமிழக அரசியலில் காகித பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #MKStalin
சென்னை

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

கிண்ணம் முழுவதும் தேன் நிரம்பிய நிலையில், அதில் ஒரு துளி எடுத்துச் சுவைத்துப் பார்த்து, கலப்படமில்லாத மலைத்தேன்தானா என்பதை உறுதி செய்துகொண்டு, குழந்தையின் நலத்திற்குக் கொடுக்க வேண்டிய மருந்துடன் அந்தத் தேனைக் குழைத்துத் தருகின்ற தாயைப் போல, கழக வளர்ச்சி என்ற தேனும், அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைவதற்கான கசப்பு மருந்தும் உரிய அளவில் கலக்கப்பட்டதுபோல, கள ஆய்வில் பேசுவோர் தம் கருத்துகளை மிகவும் எதார்த்தமாக முன்வைக்கிறார்கள். கருத்துரைப்போர் அனைவரின் நெஞ்சிலும் நிறைந்திருப்பது கழகத்தின் நலன் ஒன்றுதான். அதை  வெளிப்படுத்தும் முறையிலேயே பேசியவர்கள் எடுத்துரைத்தனர். தனி நபர்களை விட, கழகம் எனும் தத்துவப் பாசறைதான் நம் அனைவர்க்கும் உயிர் நாடி!

கொட்டிக் குவித்த கருத்து மணிகளிலிருந்து ஒரு சில மணிகளை கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களுடன், உங்களில் ஒருவனாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவ்வளவையும் பகிர்ந்து கொள்ள ஆசைதான்; காலமும் நேரமும் ஏடும் கொள்ளாதே!

ஆண் நிர்வாகிகளுக்கு இணையாக, கழகத்தின் பெண் நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். மகளிர் உரிமை பாதுகாத்தல் என்பதை வெறும் பேச்சளவில் மட்டும் சொல்லாமல், கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்குத் துணைச் செயலாளர் பொறுப்பை வழங்கி மகளிருக்கான பங்கீட்டை வழங்கி வரும் இயக்கமன்றோ!

கழகம் எனும் ஆலமரத்தினைத் தாங்கி நிற்கும் இத்தகைய விழுதுகளும், வேர்களும் நாளுக்கு நாள் பெருகிப் பரவிக்  கொண்டே இருக்கின்றன. ஆர்வம் அதிகரித்து அறிவாலயம் வருகின்ற தொண்டர்கள் பலரும் எளிய மனிதர்களாக இருக்கிறார்கள். கிராமத்தினர் பலர் காலில் செருப்புகூட அணிவதில்லை; உடைகள் கசங்கியிருக்கின்றன; ஆனால், கறுப்பு - சிவப்பு கரைவேட்டி அணிவதில் உள்ள கம்பீரத்தை வெளிப்படுத்தி, தங்கள் கொள்கை வைராக்கியத்தைக் காட்டுகிறார்கள். அறிவாலயம் என்ற பெயருக்கேற்ப அதனை அனுதினமும் தொழுதிடும் கோவிலாக நினைக்கிறார்கள். சாதி - மத பேதங்களுக்கு இடமில்லாத சமத்துவக் கோவில் அது.  அப்படித்தான் தலைவர் கலைஞர் அதனை உருவாக்கிக் கட்டமைத்திருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் மதிய உணவை ஊராட்சிச் செயலாளர்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது, அவர்களுக்கு ஏற்படும் பெருமையைவிட எனக்கு அதிக மனநிறைவு. கட்சி நிலவரங்களைக் கடந்து, அவர்களின் குடும்ப விவரம், தனிப்பட்ட நலன் ஆகியவை குறித்துப் பேசும்போது, அவர்கள் வெளிப்படுத்தும் அன்பு, மதிய விருந்தை விடவும் சுவையாக இருக்கிறது.

களஆய்வில் பங்கேற்கும் ஒவ்வொருவரும்  என்னுடன் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவர்களின் மன உணர்வை அறிந்து, நேரம் கூடுதலானாலும் பரவாயில்லை என ஒவ்வொருவருடனும் படம் எடுத்துக்கொள்ளும்போது, தோழமையுடன் தோளில் கைபோட்டுக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு வேறெதுவும் ஈடில்லைதான். படம் எடுக்க விரும்புகிறவர்கள் கழகத்தின் தொண்டர்கள் என்றால் நான் தொண்டர்களின் தொண்டனாக நினைத்து அவர்களின் அன்பை அப்படியே அரவணைத்து ஏற்றுக் கொள்கிறேன். தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே அன்றோ!

கழகத்தை குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது குடும்பக் கட்சிதான்; பல இலட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் என்று நெஞ்சம் நிமிர்த்திட் சொல்வதற்குக் காரணம், குடும்பப் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக நம் உடன்பிறப்புகள் இருப்பதால்தான். “நம் அனைவரையும் ஒரே தாய் பெற முடியாது என்பதால் தான், தனித்தனித் தாய்க்குப் பிள்ளைகளாகப் பிறந்திருக்கிறோம்“, என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதை மறக்க முடியுமா?

பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும்,  பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா! 

தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன். 

நேரில் பங்கேற்க இயலாத உடன்பிறப்புகளின் மனக் குரலையும் உணர்கிறேன். இயக்கம் வெற்றிநடை போடுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை வழங்குகிறேன்! இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.