மாநில செய்திகள்

பெரியார் பற்றி எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து + "||" + About Periyar H. Raja again controversy

பெரியார் பற்றி எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து

பெரியார் பற்றி எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து
பெரியார் பற்றி எச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார். #Periyar #HRaja
ஒட்டன்சத்திரம்,

பெரியார் பற்றி எச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார்.

பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பதிவில், “லெனின் யார்? அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் ஈ.வே.ரா (பெரியார்)” என்று கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எச்.ராஜாவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து எச்.ராஜா வருத்தம் தெரிவித்தார். இதனால் பிரச்சினை முடிவுக்கு வந்து விடும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில், திரமண விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சென்ற எச்.ராஜாவை நிருபர்கள் சந்தித்து, “உங்களுடைய முகநூல் பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். உங்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த எச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

பேட்டியின் போது அவர் கூறியதாவது:-

இதுபற்றி நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறேன். எனது ‘அட்மின்’ செய்த தவறுக்கு நடவடிக்கை எடுத்து விட்டேன். ஒவ்வொருவரும் பேசுவதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற சொல்லையும், தமிழ் உணர்வையும் அழிக்க பயன்படுத்தியது ஆகும். நீதிக்கட்சி ஆந்திராவில் தொடங்கிய பத்திரிகைக்கு ‘ஆந்திர பிரகாஷி’ என பெயர் வைத்தது. தமிழ்நாடு மட்டும் திராவிட நாடா?

1926-ல் நீதிக்கட்சி அரசு ஓர் அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், தெலுங்கு பேசும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிதெலுங்கர் என அழைக்கப்படுவார்கள் என்றும், தமிழ் மொழி பேசும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிதிராவிடர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. நீதிக்கட்சிதானே தி.க.வுக்கு முன்னோடி.

திராவிடம் என்பது 5 மொழிகள் சேர்ந்தது என்கிறார்கள். தி.க. தொடங்கிய காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் என 5 மொழிகளில் பாட்டுப் பாடுவார்கள். இந்த ஐந்தும் சேர்ந்தது திராவிடம் என்றால், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிதிராவிடர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்.

தெலுங்கு பேசும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிதெலுங்கர் என்றால், தமிழ் பேசும் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதித்தமிழர் என்று தானே கூறியிருக்க வேண்டும். அனைத்து விதத்திலும் தமிழ் என்ற பெயரே இருக்கக் கூடாது என்பதற்காக தமிழக மக்கள் மீது திணிக்கப்பட்ட சொல் தான் திராவிடம். இதை மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.

இங்கு மட்டும் ஏன் மாற்றுகிறார்கள்? தமிழ் என்கிற சனியனே கூடாது என்று பெரியார் பேசியதற்கு ஆதாரம் உள்ளது. இந்த உண்மைகளை நாம் எடுத்துக் கூறுவதால், மக்களிடம் தாக்கம் ஏற்படுகிறது. அவர்களை பற்றிய உண்மைகளை மக்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பதால் நம்மை வசைபாடுகிறார்கள்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.