மாநில செய்திகள்

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி தான் நடக்கிறது ரஜினிகாந்துக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் + "||" + Rajinikanth, Edattadi Palinasamy answered

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி தான் நடக்கிறது ரஜினிகாந்துக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி தான் நடக்கிறது ரஜினிகாந்துக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி தான் நடக்கிறது. வெற்றிடம் என்பதற்கு இடம் இல்லை என்று ரஜினிகாந்துக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். #EdappadiPalanisamy #Rajinikanth
சென்னை, 

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சி தான் நடக்கிறது. வெற்றிடம் என்பதற்கு இடம் இல்லை என்று ரஜினிகாந்துக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் மகளிரணி சார்பில், உலக மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மகளிரணி செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி. தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பெண்களுக்கு தையல் எந்திரம், பாத்திரங்கள், புடவை உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கட்சியின் நுழைவாயிலில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்தையும் அவர்கள் திறந்து வைத்து, மரியாதை செலுத்தினர். ‘கேக்’ வெட்டப்பட்டு, பெண்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, டாக்டர் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா வரவேற்று பேசினார்.

விழாவின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கருத்து பதிவிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனரே?

பதில்:- பெரியார் தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷம். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்று தருவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றிக்கண்டவர். அப்படிப்பட்ட தலைவருடைய சிலையை சேதப்படுத்துவோம், அகற்றப்படும் என்று சொல்வது கண்டனத்துக்குரியது.

கேள்வி:- பெரியார் சிலையை தொடர்ந்து அம்பேத்கர் சிலையும் அவமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பதில்:- எல்லா தலைவர் சிலைகளுக்கும் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலைவர்களுடைய சிலைகள் அவமதிக்கப்பட்டால் அவர்கள் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.

கேள்வி:- எம்.ஜி.ஆர். ஆட்சி தமிழகத்தில் கொண்டு வரப்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறாரே?

பதில்:- அது அவருடைய கருத்து. அ.தி.மு.க. ஆட்சி என்பது எம்.ஜி.ஆருடைய ஆட்சி தான். இங்கு வேறு ஆட்சியா? நடக்கிறது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா இந்த இயக்கத்தை இந்தியாவிலேயே முதன்மை இயக்கமாக கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டார்.

இறுதி வரை மக்களுக்காக பணியாற்றி மறைந்த இரு பெரும் தலைவர்களுடைய கட்சி தான் அ.தி.மு.க. எனவே வெற்றிடம் என்பதற்கு இடம் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாங்கள் தலைமை ஏற்று ஒரு வருட ஆட்சி நிறைவு பெற்றுவிட்டது. இந்த ஓராண்டு காலத்தில் எந்த தொய்வும் இல்லாமல் மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தந்திருக்கிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவர்கள் எப்படி ஆட்சி செய்தார்களோ? அதே வழியை பின்பற்றி அரசு சிறப்பான ஆட்சியை மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறது. எனவே வெற்றிடம் என்பது தமிழகத்தில் இல்லை. அவருடைய கண்ணுக்கு எப்படி தெரிகிறது என்று தெரியவில்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.