உலக செய்திகள்

வடகொரியா அதிபர் கிம் ஜாங்கை சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் + "||" + Donald Trump To Meet With North Korea's Kim Jong Un By May

வடகொரியா அதிபர் கிம் ஜாங்கை சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல்

வடகொரியா அதிபர் கிம் ஜாங்கை சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல்
கிம் ஜாங் உன் - டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு வரும் மே மாதத்திற்குள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #DonaldTrump #KimJongUn
சியோல், 

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணு ஆயுத சோதனை, கண்டம் கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளை நடத்தி உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதை வடகொரியா வாடிக்கையாக கொண்டுள்ளது. வடகொரியாவின் அத்துமீறிய  நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐநா பல்வேறு பொருளாதார தடைகளை அந்நாட்டுக்கு எதிராக விதித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியாவின் அடாவடி செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது. 

இந்த நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க ஆர்வம் தெரிவித்து இருந்ததாகவும், வடகொரிய அதிபரின் கோரிக்கைக்கு டொனால்டு டிரம்ப் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாகவும் தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் யூயி யோங் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். அமெரிக்க அதிபரை சந்தித்து அழைப்பு விடுத்த பிறகு இந்த தகவலை யோங் வெளியிட்டார். வரும் மே மாதத்திற்குள் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை. வடகொரியாவின்  இந்த முயற்சியை உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றுள்ளன.

அண்மையில், தென் கொரியா பிரநிதிகள் வடகொரிய அதிபரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பல மாதங்கள் நீடித்த தொடர்ச்சியான பரஸ்பர அச்சுறுத்தல்களுக்கு பிறகு இந்த சந்திப்பு நடக்கவிருப்பது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அணு ஆயுத நீக்கம் பற்றி தென்கொரியப் பிரதிநிதிகளுடன் கிம் பேசியுள்ளார். அது வெறும் நிறுத்திவைப்பு மட்டுமல்ல. இந்த காலகட்டத்தில் வடகொரியா ஏவுகணைச் சோதனைகளைக்கூட நடத்தாது. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தம் எட்டப்படும் வரை தடைகள் நீடிக்கும். சந்திப்பு திட்டமிடப்படுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.