தேசிய செய்திகள்

கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை + "||" + Karti Chidambaram, Accused Of Corruption, Gets Reprieve From Court

கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை மார்ச் 20-ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. #KartiChidambaram
புதுடெல்லி,

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டார். இதற்காக அவருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா ரூ.35 கோடியை கைமாறாக அளித்தது என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இதில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தை புதிய ஆதாரமாகக் கொண்டு, கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதே விவகாரத்தில் நடைபெற்ற கருப்புப் பண முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியிடமும், கார்த்தி சிதம்பரத்திடமும் கூட்டாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

அதே சமயம் தனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிப்பதில் அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை மீறிச் செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் திங்கள் கிழமை புதிய மனு ஒன்றை  தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் அமலாக்கத்துறை அதற்கு உரிய அதிகாரங்களை மீறி தனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிக்கிறது என்றும், எனவே அமலாக்கத்துறையின் சம்மன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முறையிட்டார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து.

வழக்கின் அடுத்த விசாரணை வரும் வரை கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதிப்பதாக கூறிய டெல்லி உயர் நீதிமன்றம், அடுத்த கட்ட விசாரணையை வரும் மார்ச் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.  இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை, சி.பி.ஐ காவலில் எடுத்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.