தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி; ‘ஸ்கீம்’ தொடர்பாக தமிழக அரசு வக்கீல் அளித்த விளக்கம் விபரம் + "||" + States discuss shape of Cauvery Management Board

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி; ‘ஸ்கீம்’ தொடர்பாக தமிழக அரசு வக்கீல் அளித்த விளக்கம் விபரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி; ‘ஸ்கீம்’ தொடர்பாக தமிழக அரசு வக்கீல் அளித்த விளக்கம் விபரம்
காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை அவசர கூட்டம் நடக்கிறது. #CauveryManagementBoard
சென்னை, 

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கான தண்ணீரின் அளவை குறைத்து கடந்த மாதம் 16–ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அத்துடன், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

 “நதிநீர் பங்கீட்டு வருடாந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான அமைப்புகளை உருவாக்குவது குறித்த செயல்திட்டத்தை காவிரி நடுவர் மன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறது. காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த அமைப்புகளை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு, இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து 6 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும்” என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்பதை நீதிபதிகள் வெளிப்படையாக கூறவில்லை என்றும், எனவே, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைப்பது குறித்து இந்த தீர்ப்பில் எதுவும் தெளிவாக குறிப்பிடவில்லை என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
 
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் உயர் அதிகாரிகளுடன் மத்திய அரசு டெல்லியில் ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில் கர்நாடகத்தின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரம் தொடர்பான தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) என்றுதான் கூறப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அல்லது காவிரி ஒழுங்காற்று குழு என்ற வார்த்தை எங்கும் பயன்படுத்தப்படவில்லை என கூறப்பட்டு உள்ளது.

 சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்கவேண்டும் என்று தமிழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

கூட்டம் முடிந்ததும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதை போன்று, வாரியம் ஒன்றையும், ஒழுங்காற்று குழு ஒன்றையும் மத்திய அரசு அமைக்கும். இது சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு பெறும் செயல்திட்டத்துக்கான ஆலோசனைகளை பொறுத்து அமையும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் ‘ஸ்கீம்’ என்றுதான் கூறப்பட்டுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். 

எனவே, இந்த செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும் என்றார். இன்று நடந்த கூட்டத்தில் எந்தஒரு முடிவும் எட்டப்படவில்லை. பிரச்சினையில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. 

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை அவசர கூட்டம் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

 தமிழக அரசு வக்கீல் விளக்கம்

 காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைப்பது குறித்து இந்த தீர்ப்பில் எதுவும் தெளிவாக குறிப்பிடவில்லை என்று தீர்ப்பு வந்ததுமே கருத்து எழுந்தது. 

அப்போது இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு தரப்பில் ஆஜரான வக்கீல் ஜி.உமாபதி ‘தினத்தந்தி’க்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்தார். அவர் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு காவிரி மேல்முறையீட்டு வழக்கில் வழங்கிய தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்ற நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொண்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு இது தொடர்பாக முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து உள்ளனர்.

காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு சட்டத்தின் பிரிவு 6ஏ-ன் கீழ் மத்திய அரசு ஒரு ‘ஸ்கீம்’ (செயல் திட்டத்துக்கான அமைப்பு) அதாவது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை உருவாக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நாடாளுமன்றம்தான் இதனை முடிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த வாதம் முற்றாக நிராகரிக்கப்பட்டு உள்ளது. தற்போது மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர். ‘ஸ்கீம்’ என்பது மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீட்டு சட்டத்தில் கூறப்பட்ட வார்த்தை. காவிரி மேலாண்மை வாரியம் என்பது காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வார்த்தை. தற்போது சுப்ரீம் கோர்ட்டு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. ‘ஸ்கீம்’ என்பது செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்பு. இதனை மத்திய அரசு உருவாக்க வேண்டும் .

எனவே, இந்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு 6 வாரங்களுக்குள் கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் இவ்வாறு வக்கீல் ஜி. உமாபதி கூறினார்.