மாநில செய்திகள்

காவிரி பிரச்சினை: சட்டசபை சிறப்பு கூட்டம் தமிழக அரசு முடிவு + "||" + Assembly Special Meeting Tamil Nadu government decision

காவிரி பிரச்சினை: சட்டசபை சிறப்பு கூட்டம் தமிழக அரசு முடிவு

காவிரி பிரச்சினை:
சட்டசபை சிறப்பு கூட்டம்
தமிழக அரசு முடிவு
சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சிறப்பு கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை, 

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டம் கடந்த மாதம் 22-ந் தேதி நடத்தப்பட்டது.

தமிழகத்தின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டபோது, முதலில் மத்திய நீர் வளத்துறை மந்திரியை சந்திக்கும்படி பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

இந்த நிலையில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் கடந்த 9-ந் தேதியன்று டெல்லி சென்று மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகி 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக நேரடியாக வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், சட்டசபை சிறப்புக் கூட்டத்தை கூட்டி காவிரி விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியது.

இந்த சூழ்நிலையில் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 15-ந் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் காவிரி விவகாரத்துக்காக ஒரு நாளில் சிறப்பு கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி சட்டசபையின் உயர் அதிகாரி ஒருவரை கேட்டபோது அவர் கூறியதாவது:-

வருகின்ற 15-ந் தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும். அதில், காவிரி விவகாரத்துக்கான சிறப்பு கூட்டம் நடக்கும் நாள் மற்றும் நேரம் முடிவு செய்யப்படும்.

பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் அலுவல் நேரத்தில்கூட காவிரி விவகாரம் தொடர்பான தீர்மானத்தை கொண்டுவந்து விவாதிக்க முடியும். ஆனால் அதை சிறப்பு நிகழ்வாக எடுத்து முக்கியப்படுத்த வேண்டும் என்று அரசு விரும்புவதால், அதற்கான சிறப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த சிறப்பு கூட்டத்தை 15-ந் தேதி மாலையிலோ அல்லது 16-ந் தேதியோ நடத்த வாய்ப்புள்ளது. ஆனால் அதுபற்றி அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில்தான் முடிவெடுக்கப்படும்.

இந்த கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, சட்டமன்ற கட்சித்தலைவர்கள் பேசுவார்கள். பின்னர் முதல்-அமைச்சர் பேசுவார். பின்னர் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.