மாநில செய்திகள்

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை + "||" + Rigorous action by rumor Police Commissioner warns

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்தார்.
சென்னை,

சென்னை அருகே நாவலூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்தவர் லாவண்யா (வயது 30). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி இரவு பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு வரும்போது, பள்ளிக்கரணை அருகே கொள்ளையர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர், தற்போது உடல்நலம் பெற்றுவிட்டார். நேற்று அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்தார்.

தான் தாக்கப்பட்ட விஷயத்தில் போலீசார் எடுத்த நடவடிக்கைக்கும், செய்த உதவிக்கும் அவர் அப்போது நன்றி தெரிவித்தார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

லாவண்யா உடல்நலம் பெற்றுள்ளார். அவர் மீண்டும் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் மிகவும் கொடூரமான சம்பவத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவருடைய துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் பாராட்டுகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பியதால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இதுபோல் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள் என்று வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வதந்தி பரப்புபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு யாரும் செயல்படக்கூடாது. தங்கள் பகுதிகளில் சந்தேக நபர்கள் சுற்றித்திரிந்தால் அதுபற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ அல்லது போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ தான் தகவல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

லாவண்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

கொள்ளையர்களால் தாக் கப்பட்ட சம்பவத்தில் இருந்து நான் மீண்டுவர போலீசார் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எனக்கு உதவி செய்தனர். ஊக்கம் கொடுத்தனர். சம்பவம் நடந்தபிறகு 10 நாட்கள் நான் என் முகத்தைக்கூட கண்ணாடியில் பார்க்கவில்லை.

போலீஸ் கமிஷனர் என்னை சந்தித்து ஆறுதல் கூறினார். பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் சிவகுமார் எனக்கு ஊக்கம் கொடுத்து பேசினார். இதனால் நான் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன். எனக்கு நல்ல திருமண வாழ்க்கையும் அமையப்போகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராம், சேஷசாயி, இணை கமிஷனர்கள் அன்பு, மகேஸ்வரி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.