தேசிய செய்திகள்

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு + "||" + Karnataka Election To Test Rahul Gandhi's Leadership, PM Modi's 2019 Pitch

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. #KarnatakaElections2018

பெங்களூரு,

கர்நாடகத்தில் 222 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று  தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.  தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

கர்நாடக சட்டபேரவை தேர்தலுக்கான  வேட்பு மனு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. 27-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. களத்தில் 2,636 வேட்பாளர்கள் இருந்தனர். இதில் ஆண் வேட் பாளர்கள் 2,417 பேரும், பெண் வேட்பாளர்கள் 219 பேரும் உள்ளனர். இதில்  பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் கடைசி நேரத்தில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் (ஆர்.ஆர்.நகர்) தொகுதிக்கான தேர்தல் வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அந்த 2 தொகுதிகளை தவிர்த்து 222 தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்றது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 

600 மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.பிங்க் நிறத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் மகளிர் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்ததை காண முடிந்தது.  வாக்குச்சாவடிகளை பெண் அலுவலர்கள் மட்டும் நிர்வகித்தனர். அவர்கள் அனைவரும் ‘பிங்க்‘ நிற சீருடை அணிந்து பணியாற்றினர். பெண்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முதன் முறையாக கர்நாடகத்தில் இந்த நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.

மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.  மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி 61.25 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த தேர்தலில் பதிவாகியுள்ள  வாக்குகள் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கர்நாடக தேர்தல் களத்தில் ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 

எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை தான் அமையும் என்றும் பெரும்பாலான ஊடக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு வருகிற 28-ந் தேதி நடைபெறும் என்றும், 31-ந் தேதி அன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல்  ஆணையம் அறிவித்துள்ளது.