கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப்பை பந்தாடியது கொல்கத்தா, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + KXIP cross 200 but KKR in command

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப்பை பந்தாடியது கொல்கத்தா, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப்பை பந்தாடியது கொல்கத்தா, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. #IPL

இந்தூர், 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெறுகிறது. இப்போட்டியில் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. 

துவக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுனில் நரைனும் களம் இறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். குறிப்பாக சுனில் நரைன் பேட்டிங்கில் அனல் பறந்தது. அவரது பேட்டில் பட்ட பந்துகள் நாலாபுறமும் சிதறி ஓடின. இதற்கிடையில், கிறிஸ் லின் 27 ரன்கள் (17 பந்துகள்) ஆட்டமிழந்தார். களத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய சுனில் நரைன் 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.  36 பந்துகளை எதிர்கொண்ட சுனில் நரைன் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 

அடுத்து வந்த வீரர்களான உத்தப்பா (24 ரன்கள்), ரஸ்ஸல் (31 ரன்கள்) கணிசமான பங்களிப்பை அளித்தனர். கடைசி கட்ட ஓவர்களில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார். 23 பந்துகளில் 50 ரன்கள் அடித்த நிலையில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார்.  கொல்கத்தா அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான் ஆகும். 


இதையடுத்து, 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி, 57 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அபாயகரமான பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் 17 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்த நிலையில், ரஸ்ஸல் பந்தில் பெவிலியன் திரும்பினார். மற்றொரு துவக்க வீரர் கே.எல் ராகுல் அதிரடி காட்டினார். இதற்கிடையில், மயங்க் அகர்வால் ரன் எதுவும் இன்றியும் கருண் நாயர் 3 ரன்களிலும் அடுத்தடுத்து நடையை கட்டினர். 7 சிக்சர்களை பறக்க விட்ட கே.எல் ராகுல்  66 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல் ராகுல் அவுட் ஆனதும் பஞ்சாப் அணியின் நம்பிக்கை ஏறக்குறைய தகர்ந்துவிட்டது. 

அடுத்து வந்த பிஞ்ச் 34 ரன்கள், அக்சர் படேல், 19 ரன்கள் என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அஷ்வின் (45 ரன்கள், 22 பந்துகள், 4 பவுண்டரிகள்,3 சிக்சர்கள்)  அதிரடி காட்டிய போதிலும், அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. டை 14  ரன்களில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே சேர்த்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  

பஞ்சாப் அணி இப்போட்டியில் தோல்வி அடைந்ததால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி மட்டுமே தற்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.