மாநில செய்திகள்

வங்கியில், பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது + "||" + Four arrested in case of money-jewelry robbery

வங்கியில், பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது

வங்கியில், பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேர் கைது
மன்னார்குடி அருகே வங்கியில் துப்பாக்கி முனையில் பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர், 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 7-ந் தேதி மதியம் காரில் வந்த மர்ம நபர்கள் 5 பேர், துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.5 லட்சத்து 58 ஆயிரம் பணம் மற்றும் 10½ பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் கோவிந்தராஜ் புகாரின் பேரில், மன்னார்குடி போலீஸ் வழக்கு பதிவு செய்தது. கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து 4 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம், துப்பாக்கி, கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜுலு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கொள்ளைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மணப்பாறை மெர்க்கன்டைல் வங்கியில் பணியாற்றிய கடைநிலை ஊழியர் தூத்துக்குடி மாவட்டதை சேர்ந்த மரியசெல்வம்(வயது 35). அவருடன், சுடலைமணி, மீரான்மைதீன், முத்துக்குமார் மற்றும் 2 பேரும் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மரியசெல்வம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மன்னார்குடி நகரத்தில் உள்ள அனைத்து சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி அவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. இதில் கிடைத்த சில படங்களை கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஒரு படையானது தூத்துக்குடிக்கு சென்று கார் டிரைவர் பரசிவம் மகன் முத்துக்குமார்(27), சுல்தான் மகன் மீரான்மைதீன்(29), மாடசாமி மகன் சுடலைமணி(26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதேபோல் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிவேல் ஆகியோர் மணப்பாறை சென்று மரியசெல்வத்தை கைது செய்தனர்.

மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் ஒன்று நாட்டு துப்பாக்கி, மற்றொன்று போலி துப்பாக்கியாகும். இந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு 4 நாட்களில் கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.