தேசிய செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல்: 70 சதவீத வாக்குகள் பதிவு பிந்தைய கருத்து கணிப்பு முடிவில் பரபரப்பான தகவல்கள் + "||" + Karnataka assembly election 70 percent of the votes are recorded

கர்நாடக சட்டசபை தேர்தல்: 70 சதவீத வாக்குகள் பதிவு பிந்தைய கருத்து கணிப்பு முடிவில் பரபரப்பான தகவல்கள்

கர்நாடக சட்டசபை தேர்தல்: 70 சதவீத வாக்குகள் பதிவு  பிந்தைய கருத்து கணிப்பு முடிவில் பரபரப்பான தகவல்கள்
கர்நாடக சட்டசபை தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. #KarnatakaElections2018
பெங்களூரு, 

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

பாரதீய ஜனதா வேட்பாளர் மரணம் காரணமாக பெங்களூரு ஜெயநகர் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாலும், வாக்காளர் அடையாள அட்டை பிரச்சினை காரணமாக ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாலும் 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாரதீய ஜனதா, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. 3 முக்கிய கட்சிகள் களத்தில் இருந்தாலும் ஆட்சியை கைப்பற்றுவதில் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையேதான் கடும் பலப்பரீட்சை நிலவுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுவதால், இங்கு ஆட்சியை கைப்பற்றுவதில் அந்த இரு கட்சிகளும் மும்முரமாக உள்ளன.

காங்கிரஸ் 220 தொகுதிகளிலும், பாரதீய ஜனதா 222 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றன. மதசார்பற்ற ஜனதா தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி 217 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, இந்திய குடியரசு, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. அ.தி.மு.க. 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. சுயேச்சைகள், பெண்கள் உள்பட மொத்தம் 2,622 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

முதல்-மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளிலும், பாரதீய ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியிலும், மதசார்பற்ற ஜனதாதளத்தின் முதல்-மந்திரி வேட்பாளர் குமாரசாமி ராமநகர், சென்னபட்னா ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார் கள்.

சுமார் 5 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போடு வதற்காக மாநிலம் முழுவதும் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் பணம் அதிகமாக விளையாடியது. வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக புகார்கள் வந்ததால், முறைகேடுகளை தடுக்க வாக்குப்பதிவை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் கமிஷன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தது.

நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையிலேயே ஏராளமான ஆண்களும், பெண்களும் ஓட்டுச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு சற்று தாமதமாக தொடங்கியது. கடலோர கர்நாடக பகுதியில் மழை பெய்ததால் ஓட்டுப்போட வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் சிரமப்பட்டனர்.

முதல்-மந்திரி சித்தராமையா தனது மகன் யதீந்திரா போட்டியிடும் வருணா தொகுதியில் சித்தராமனஉண்டி கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் சென்று ஓட்டுப்போட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், “எடியூரப்பாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால்தான் வருகிற 17-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன் என்று கூறி இருக்கிறார். அவர் கனவு காண்பதை யாரும் தடுக்க முடியாது. காங்கிரஸ்தான் மீண்டும் ஆட்சியில் அமரும்” என்றார்.

தான் போட்டியிடும் சிகாரிபுரா தொகுதியில் வாக்களித்த எடியூரப்பா பின்னர் பேட்டி அளிக்கையில், 150 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும், தனது தலைமையில் புதிய அரசு அமையும் என்றும், காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவேகவுடா ஹாசன் மாவட்டம் படுவலஹிப்பே கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஓட்டுச்சாவடியிலும், அவரது மகனும், அக்கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளருமான குமாரசாமி ராமநகரம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியிலும் ஓட்டுப்போட்டனர்.

ஒரு சில இடங்களில் சலசலப்புகள் ஏற்பட்ட போதிலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 6 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. 70 சதவீதம் வாக்குகள் பதிவாயின. (கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 71.45 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன).

ஓட்டுப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது அன்று மதியத்துக்குள் தெரிந்துவிடும்.

கருத்து கணிப்பு முடிவுகள்

இதற்கிடையே நேற்று ஓட்டுப்போட்டு விட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பரபரப்பான முடிவுகள் வெளியாயின.

டைம்ஸ் நவ் டி.வி.-வி.எம்.ஆர். சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கு 80 முதல் 93 இடங்களும், காங்கிரசுக்கு 90 முதல் 103 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 31 முதல் 39 இடங்களும் கிடைக்கும் என தெரியவந்து உள்ளது.

இந்தியா டுடே டி.வி.யின் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கு 79 முதல் 92 இடங்களும், காங்கிரசுக்கு 106 முதல் 118 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 22 முதல் 30 இடங்களும் கிடைக்கும் என தெரியவந்து இருக்கிறது.

சி ஓட்டர் நடத்திய கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கு 97 முதல் 109 இடங்களும், காங்கிரசுக்கு 87 முதல் 99 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 21 முதல் 30 இடங்களும் கிடைக்கும் என்றும், நியூஸ் எக்ஸ்-சி.என்.எக்ஸ். சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கு 102 முதல் 110 இடங்களும், காங்கிரசுக்கு 76 முதல் 80 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 35 முதல் 37 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்து உள்ளது.

ரிபப்ளிக் டி.வி. சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கு 95 முதல் 114 இடங்களும், காங்கிரசுக்கு 72 முதல் 78 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 32 முதல் 43 இடங்களும் கிடைக்கும் என தெரியவந்து உள்ளது.

என்.டி.டி.வி. நடத்திய கருத்து கணிப்பில் பாரதீய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் தலா 94 இடங்கள் கிடைக்கும் என தெரியவந்து இருக்கிறது.